சென்னை அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் கிடுக்கிப்பிடி
சென்னை அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் கிடுக்கிப்பிடி
ADDED : மார் 19, 2024 03:51 AM
சென்னை, : சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, வி.வி.ஐ.பி.,க்கள் தொடர்பு குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.
தி.மு.க., அயலக பிரிவு முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான, ஜாபர் சாதிக், 35, கடந்த 9ம் தேதி, டில்லியில் மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை ஏழு நாள் காவலில் விசாரித்தனர்.
அதன்பின், மூன்று நாள் காவல் விசாரணை நீட்டிக்கப்பட்டது. டில்லியில் விசாரணை முடிந்து, ஜாபர் சாதிக் நேற்று காலை, 5:00 மணியளவில், விமானம் வாயிலாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவரிடம், சென்னை வானகரம் அருகே அயப்பாக்கத்தில், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது.
அமீருக்கு தொடர்பா?
இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
தி.மு.க.,வில் இருந்த போது, ஆளும் கட்சியினருக்கு ஜாபர் சாதிக் நிதியுதவி அளித்துள்ளார். இந்தத் தொகை போதைப்பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்ததா என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அத்துடன், வி.வி.ஐ.பி.,க் களுடன் நெருக்கமாக இருந்தது ஏன்; அவர்களுக்கு ஜாபர் சாதிக், போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் என்பது, வி.வி.ஐ.பி.,க்களுக்கு தெரியுமா? அமைச்சருக்கு, 7 லட்சம் ரூபாய் தந்தது மற்றும் போதைப்பொருள் கடத்தலில் இயக்குனர் அமீருக்கு பங்கு உள்ளதா என்றும் விசாரிக்கப்பட்டது.
'கயல் ஆனந்தி நடித்த,மங்கை திரைப்படம் முழுதும் போதைப்பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணத்தில் எடுக்கப்பட்டது' என, ஏற்கனவே ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். அதற்காக, நடிகர், நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு எவ்வளவு தொகை தரப்பட்டது.
வாக்குமூலம்
அமீர் இயக்கி வரும், இறைவன் மிகப்பெரியவன் படம் தயாரிக்க, போதை பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணம் செலவு செய்யப்பட்டதா என்றும் கேட்கப்பட்டது.
ஜாபர் சாதிக்கின், மொபைல் போன், இ - மெயில்கள் வாயிலாக, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் ஏஜன்டுகளின் விபரம் திரட்டப்பட்டு உள்ளது.
அவர்களுடனான தொடர்பு மற்றும் சந்திப்புகள் குறித்தும், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உடனான தொடர்பு மற்றும் கூட்டாளி சதானந்தம் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, ஜாபர் சாதிக் உறவினர் மற்றும் நண்பர் என, இருவர் அழைத்து வரப்பட்டு, அவர்களிடம் தனித்தனியாகவும், ஜாபர் சாதிக்குடனும் சேர்த்து விசாரித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. விசாரணை தொடர்கிறது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

