UPDATED : செப் 12, 2011 04:30 AM
ADDED : செப் 12, 2011 02:19 AM
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் மேய்ச்சல் நிலப்பரப்பு சுருங்கி வருவதால், பெரும்பாலான விவசாயிகள், விளை நிலங்களில் கால்நடை தீவன பயிர்களை சாகுபடி செய்து, தீவனத்தட்டுப்பாட்டை சரி செய்து வருகின்றனர்.
மாவட்டத்தில் கடந்த காலங்களில் 6 ஆயிரத்து 209 ஹெக்டர் மேய்ச்சல் புல்தரைகள் பரப்பு இருந்தது. கடந்த 2008ம் ஆண்டு கால்நடைகள் கணக்கெடுப்புபடி மாவட்டத்தில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 798 மாட்டினங்களும், 78 ஆயிரத்து 758 எருமைகளும், செம்மறி ஆடுகள் 2 லட்சத்து ஆயிரத்து 117 ஆடுகளும், ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 477 வெள்ளாடுகளும் வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் மேய்ச்சல் நிலங்கள் அனைத்திலும் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வந்தது. சமீப காலமாக மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் பல்வேறு வகைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு புல் தரைகள் இல்லாமல் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களில் ஒரு பகுதியை கால்நடை தீவனப்புல் சாகுபடி செய்து வருகின்றனர். இதனால், கிராம பகுதியில் பால் உற்பத்தியும் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.