ADDED : ஜன 19, 2024 12:47 AM
சென்னை:தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.
கடந்தாண்டு, தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யவில்லை. இதனால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு முறைப்படி நீர் திறக்கப்படவில்லை.
கர்நாடக அரசு வழங்க வேண்டிய நிலுவை நீரின் அளவு, 90.5 டி.எம்.சி.,யாக அதிகரித்து உள்ளது. மேட்டூர் அணையில், 33.4 டி.எம்.சி., நீர் உள்ளது.
கர்நாடகா நிலுவை நீரை வழங்கினால், தட்டுப்பாடின்றி நீரை திறக்க முடியும். முறைப்படி நீரை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளில், தமிழக அரசு கவனம் செலுத்த வில்லை.
இது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முறைப்படி நீரை பெற்று தர வலியுறுத்தி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆங்காங்கே போராட்டங்களை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நடக்கும் குறைதீர்ப்பு கூட்டத்தில், காவிரி நீர் கேட்டு முற்றுகையிட, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர். இது அரசிற்கு தேர்தல் நேர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் பணிகளை மேற்கொள்ள, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

