மோசடி நிறுவன பங்குதாரரை கரூரில் 'துாக்கியது' சி.பி.ஐ.,
மோசடி நிறுவன பங்குதாரரை கரூரில் 'துாக்கியது' சி.பி.ஐ.,
ADDED : ஆக 04, 2025 12:42 AM

கரூர்; தலைமறைவாக இருந்த நிதி நிறுவன பங்குதாரரை, ஒடிசா மாநில சி.பி.ஐ., போலீசார், கரூர் அருகே நேற்று கைது செய்தனர்.
கோவை, பீளமேடை சேர்ந்தவர் சிவக்குமார், 55; கோவை, வடவள்ளி சீனிவாசன், 50; பொள்ளாச்சி குணசேகரன், 51, முருகவேல், 51; ஒடிசா மாநிலம், கஞ்சம் ரபிந்திரநாத் ஜனா, 48; கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த ஒருவர் என, ஐவர், 2014ல் பெங்களூருவில் நிதி நிறுவனம் தொடங்கினர்.
நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு வட்டி தருவதாக விளம்பரம் செய்தனர். அதை நம்பி, நாடு முழுதிலும், 5,000 பேர் வரை, பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.
குறிப்பாக, ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் மாவட்டத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தனர். கெடு முடிந்தும், வட்டி மற்றும் முதலீடு பணத்தை தரவில்லை. புவனேஸ்வர் மாவட்டத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள், அம்மாநில எஸ்.பி., அலுவலகத்தில், 2016ல் புகாரளித்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.
சிவக்குமார் மற்றும் அடையாளம் தெரியாத நபரை தவிர, நான்கு பேரை சி.பி.ஐ., போலீசார் கைது செய்து, ஒடிசா மாநிலத்தில் பல்வேறு சிறைகளில் அடைத்தனர்.
தலைமறைவாக இருந்த சிவக்குமார், கரூர் மாவட்டம், கணபதிபாளையத்தில், உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாக, ஒடிசா சி.பி.ஐ., போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சி.பி.ஐ., இன்ஸ்பெக்டர் ஷனட்டன் தாஸ் தலைமையிலான போலீசார், பசுபதிபாளையம் போலீசார் உதவியுடன், கணபதிபாளையத்தில் பதுங்கியிருந்த சிவக்குமாரை நேற்று கைது செய்தனர்.