ADDED : அக் 23, 2025 12:23 AM
சென்னை: வருமானத்திற்கு அதிகமாக, தன் பெயரிலும், மனைவி மற்றும் மகள்கள் பெயரிலும் சொத்து சேர்த்து இருப்பதாக, புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பொதுப்பணித்துறை அதிகாரி மீது, சென்னை சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் , காரைக்கால் பட்டம்மாள் நகரை சேர்ந்தவர் சிதம்பரநாதன். இவர், காரைக்காலில், பொதுப்பணித் துறையில், இளநிலை பொறியாளராக, 1987 - 2016 வரை பணிபுரிந்துள்ளார்.
அதன் பின், 2016 - 2023 வரை உதவி பொறியாளராகவும், இந்த ஆண்டு, மே 17 வரை செயற்பொறியாளராக பணிபுரிந்துள்ளார். இவர், லஞ்சப்புகாரில் சிக்கி, கடந்த மார்ச் மாதம் சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சிதம்பரநாதன் தன் மனைவி மற்றும் மகள்கள் பெயரில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக, சென்னை சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், சிதம்பரநாதன், தன் மனைவி சிவகாம சுந்தரி, மகள்கள் சண்முகப்பிரியா, ஸ்ருதிலயா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயரில், வருமானத்திற்கு அதிகமாக, 87.29 லட்சம் ரூபாய்க்கு, அதாவது, 76.71 சதவீதத்திற்கு சொத்து சேர்த்து இருப்பதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.