ADDED : ஜூன் 30, 2025 11:55 PM

திருப்புவனம்:
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் காவலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ.,விசாரிக்க வேண்டும் என பா.ஜ.,தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தரின் காரில் இருந்த தங்க நகை திருடு போன புகாரில் கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் 29, என்பவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணையின் போது அஜித் உயிரிழந்தார். போலீசார் அடித்து கொலை செய்ததாக உறவினர்கள், பொதுமக்கள் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தினர். நேற்று காலை எச். ராஜா, அஜித்குமாரின் சகோதரர் நவீன், தாயார் மாலதியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
எச்.ராஜா கூரியதாவது:
மடப்புரம் சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும், உள்ளுர் போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது.
மடப்புரம் சம்பவத்தில் இன்று வரை நிதி வழங்கவில்லை. அஜித்குமார் குடும்பத்தினரை தி.மு.க.,வினர் காரில் ஏற்றி சென்றது ஏன். தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் ஏன் இந்த விஷயத்தில் தலையிடுகிறார்.
அஜித்குமாருக்கு கார் ஓட்ட தெரியாத நிலையில் காரை எடுத்துச் சென்ற நபரை ஏன் விசாரிக்கவில்லை. அவரை வழக்கில் ஏன் சேர்க்கவில்லை. கோயில் ஊழியர்கள் ஏன் அஜித்குமாரை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். தமிழகத்தில் இதுவரை 25 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. 2026 மே மாதத்திற்கு பிறகு இந்த அரசாங்கம் இருக்காது என்றார்.