சி.பி.ஐ., அதிகாரி லஞ்சம் வாங்கிய வழக்கு; அரசுப் பள்ளி ஆசிரியருக்கு சம்மன்
சி.பி.ஐ., அதிகாரி லஞ்சம் வாங்கிய வழக்கு; அரசுப் பள்ளி ஆசிரியருக்கு சம்மன்
ADDED : ஜூன் 11, 2025 09:10 PM

மதுரை: வழக்கில் இருந்து விடுவிக்க சி.பி.ஐ., அதிகாரி ரூ. 7 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில், வருமான வரி மோசடி புகாரில் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு மதுரை சி.பி.ஐ., அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு ஜனாதிபதியிடம் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன், வருமானவரி முறைகேடு தொடர்பான வழக்கில் ரூ.12 லட்சம் ரொக்கத்தை, அவரது சகோதரர் பஞ்சாட்சரத்தின் வங்கி கணக்கில் இருந்து பெறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக ராமச்சந்திரனிடம், மதுரை சி.பி.ஐ., அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த தினேஷ்குமார் என்ற சி.பி.ஐ., அலுவலர் ரூ. 7 லட்சம் லஞ்சம் கேட்டது தொடர்பான வீடியோ கடந்த டிசம்பர் 2023ம் ஆண்டு வெளியானது.
அதன் அடிப்படையில், அந்த சி.பி.ஐ., அலுவலர் தினேஷ்குமார் மீது மதுரை சி.பி.ஐ.,யில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு வருகின்ற 13ம் தேதி ஆஜராவதற்கு ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு மதுரை சி.பி.ஐ., அலுவலகத்தால் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.