ADDED : மார் 06, 2024 11:28 PM
சென்னை, - சென்னையை அடுத்த செங்குன்றத்தில், 2016ல் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி, மாநிலம் முழுதும் விற்பது தெரியவந்தது. முதலில் ஆறு பேருக்கு எதிராக, 2021ல் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
பின், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உள்பட 11 பேருக்கு எதிராக, கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஓய்வுபெற்ற டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரின் பெயர்களும் இருப்பதாக கூறப்பட்டது.
அதற்கு மத்திய அரசின் அனுமதி பெறாதது போன்ற தவறுகள் உள்ளதாக கூறி, கூடுதல் குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்து தாக்கல் செய்ய, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி மலர் வாலண்டினா முன் வந்தது. அப்போது சி.பி.ஐ., தரப்பில், 'கூடுதல் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், இரண்டு பேருக்கு எதிராக வழக்கை நடத்த, இன்னும் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை' என, தெரிவிக்கப்பட்டது.
பல முறை இதே காரணத்தை கூறுவதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, சி.பி.ஐ., அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.

