பல்லடம் 3 பேர் கொலை வழக்கு சி.பி.ஐ., விசாரணை தேவை அண்ணாமலை பேட்டி
பல்லடம் 3 பேர் கொலை வழக்கு சி.பி.ஐ., விசாரணை தேவை அண்ணாமலை பேட்டி
ADDED : டிச 06, 2024 07:14 PM

திருப்பூர்:''பல்லடம் அருகே மூன்று பேர் கொலை வழக்கில், சி.பி.ஐ., விசாரணை தேவை,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த சேமலைக்கவுண்டம்பாளையத்தில், நவ., 29ல் விவசாயி தெய்வசிகாமணி, 78, இவரது மனைவி அலமேலு, 75. இவர்களது மகன் ஐ.டி., துறை ஊழியர் செந்தில்குமார், 45, ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
அவர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து நேற்று ஆறுதல் கூறிய, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் தர வேண்டும். குற்றவாளிகளை பிடிப்பதும், நிவாரணம் கொடுப்பதும் அரசின் கடமை. தமிழகத்தில் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. காவல் துறைக்கு சுதந்திரம், வாகன வசதி இல்லை. அடிப்படை வசதி இல்லாமல் அவர்களால் வேலை செய்ய முடியாது.
அரிவாள் கலாசாரம்
இளைஞர்கள் நகரத்தை நோக்கி சென்று விட்டனர். கிராமங்களில் வயதானவர் மட்டுமே உள்ளனர். அவர்களை குறிவைத்து, இது போல தாக்குதல் நடக்கிறது. அரிவாள் கலாசாரம் வளர்ந்துள்ளது. துப்பாக்கியை காவல் துறை எங்கு எடுக்க வேண்டுமோ, அங்கு எடுத்துத்தான் வேண்டும். அவர்கள் பின்னால் அரசியல் தலைவர்கள் நிற்க வேண்டும். மாவட்டம், மாநிலம் தாண்டி வேலை பார்ப்பவர்களின் விபரம் சரி பார்க்க வேண்டும்.
நம்பிக்கை போய்விடும்
இதுவே முதலும், முடிவுமாக இருக்க வேண்டும். இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி, ஆக்ரோஷமான காட்சிகளை பார்த்து வளர்கின்றனர். அவர்களிடம் ஆயுதம் கிடைத்தால் என்னாகும் என்பதைப் பார்க்கிறோம்.
மக்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாவிட்டால், ஜனநாயகம் மீது நம்பிக்கை போய்விடும். போதை கலாசாரம் இல்லாமல் கொடூர கொலை நடந்திருக்காது. அதை அழிக்க வேண்டும்.
கொலை நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. தாமதமானால் புலனாய்வு கடினம். அதனால் தான் சி.பி.ஐ., விசாரணை கேட்கிறோம். முதல்வரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சேர்ந்து பயணிப்போம். முன்மாதிரி அரசியல் கட்சிகளாக இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கெருடமுத்துாரை சேர்ந்த நான்கு பேர், ராமேஸ்வரத்தில் நடந்த சாலை விபத்தில் பலியாயினர். அவர்களது உறவினர்களை சந்தித்து அண்ணாமலை ஆறுதல் கூறினார்.