வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தில் சி.பி.ஐ., சோதனையில் கட்டுக்கட்டாக ஆவணம் பறிமுதல்
வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தில் சி.பி.ஐ., சோதனையில் கட்டுக்கட்டாக ஆவணம் பறிமுதல்
ADDED : ஏப் 07, 2025 01:06 AM
சென்னை: தாது மணல் கொள்ளை தொடர்பாக, வி.வி.மினரல்ஸ் நிறுவன அலுவலகங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, கட்டுக்கட்டாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரை பகுதியில், தாது மணல் கொள்ளை நடந்ததால், தாது மணல் எடுக்க, 2013ல் தமிழக அரசு தடை விதித்தது.
தாது மணல் கொள்ளை குறித்து, நீதிமன்ற உத்தரவின்படி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ககன்தீப்சிங் பேடி, சத்யபிரதா சாஹு தலைமையிலான குழுக்கள் விசாரணை நடத்தின. இக்குழுக்கள் விரிவாக அறிக்கை அளித்தன.
அதன் அடிப்படையில், தாது மணல் கொள்ளை குறித்து சி.பி.ஐ., விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று முன்தினம் காலை, 6:00 மணியில் இருந்து இரவு, 8:30 மணி வரை, சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில், வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் உட்பட, 13 இடங்களில் சோதனை நடத்தினர்.
இதுகுறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:
தாது மணல் கொள்ளை யில் ஈடுபட்ட நிறுவனங்கள், தமிழக அரசுக்கு, 5,832 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளன.
தாது மணல் எடுக்க, அரசு தடை விதித்த பிறகும், வி.வி.மினரல்ஸ் நிறுவனம், டிரான்ஸ்வேர்ல்டு கார்னெட், பீச் மினரல் நிறுவனம், ஐ.எம்.சி., போன்ற நிறுவனங்கள், தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே, கீரைக்காரன் தட்டு கிராமத்தில், வைகுண்டராஜனுக்கு சொந்தமான வி.வி.மினரல்ஸ் தலைமை அலுவலகம் மற்றும் அவரின் சகோதரருக்கு சொந்தமான நிறுவனங்களில் நடத்திய சோதனையில், ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன.
எழும்பூரில், வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் ஆடிட்டர் ஹரி என்பவர் வீட்டிலும், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. இவற்றை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம். அத்துடன், வி.வி.மினரல்ஸ் நிர்வாக பங்குதாரர் வைகுண்ட ராஜன் உட்பட, 21 பேர்; ஆறு நிறுவனங்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

