அன்புமணி மீதான ஊழல் வழக்கை சி.பி.ஐ., விரைவுப்படுத்தணும்: ராமதாஸ்
அன்புமணி மீதான ஊழல் வழக்கை சி.பி.ஐ., விரைவுப்படுத்தணும்: ராமதாஸ்
ADDED : டிச 18, 2025 06:23 AM

சென்னை: 'அன்புமணி மீதான ஊழல் வழக்கு விசாரணையை, சி.பி.ஐ., விரைவுப் படுத்த வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில், ராமதாஸ் தலைமையில் நேற்று, பா.ம.க., நிர்வாக குழு கூட்டம் நடந்தது. செயல் தலைவர் ஸ்ரீ காந்தி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, அருள் எம்.எல்.ஏ., உள்ளிட்ட 22 பேர் பங்கேற்றனர்.
அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி வைத்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்காத காவல் துறையை கண்டிக்கிறோம்
* பா.ம.க., தலைவரும், ராமதாசின் மகனுமான அன்புமணி மீதான ஊழல் வழக்கு விசாரணையை, சி.பி.ஐ., விரைவுப்படுத்த வேண்டும்
* தேர்தல் கமிஷனில் போலி ஆவணங்கள் கொடுத்த அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
* சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க, ராமதாசுக்கு அதிகாரம் அளிக்கப் படுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின், ராமதாஸ் அளித்த பேட்டி:
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணி, பா.ம.க., பெயர், சின்னம், என் பெயரை பயன்படுத்தக் கூடாது. கட்சியை உருவாக்கிய, நான் இதை சொல்கிறேன். கட்சியை கைப்பற்ற அன்புமணி, பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு என அன்புமணியை எச்சரிக்கிறேன்.
வரும் சட்டசபை தேர்தலில், கண்டிப்பாக வெற்றி கூட்டணி அமைப்பேன். பா.ம.க., சார்பில் போட்டியிட வேட்புமனுக்களை வாங்க, அவருக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் கமிஷன் உத்தரவையும் மீறி, அன்புமணி செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

