ADDED : மார் 15, 2024 12:56 AM
சென்னை:சென்னை மடிப்பாக்கத்தில், தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில், மத்திய அரசின் சி.சி.ஐ., அதிகாரிகள், 14 மணி நேரம் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
கேரளாவை சேர்ந்த ரெஜி ஜாக்கப் என்பவர், சென்னை மேடவாக்கம் அடுத்த மடிப்பாக்கம் பிரதான சாலையில், 'ஜாக்கப் சைன்டிபிக்ஸ்' என்ற பெயரில், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இங்கு, மருத்துவமனைக்கு தேவையான மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் போன்றவை தயார் செய்யப்பட்டு, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிறுவனம், வரி ஏய்ப்பு உள்ளிட்ட முறைகேட்டில் ஈடுபட்டதாக, மத்திய அரசின் கீழ் இயங்கும் சி.சி.ஐ., எனப்படும் 'காம்படிஷன் கமிஷன் ஆப் இந்தியா' துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, இந்த நிறுவனத்தில், சி.சி.ஐ., துணை இயக்குனர் ஜெனரல் புல்புலி ரிச்சாங் தலைமையில் அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை 14 மணி நேரம் நீடித்தது.
இதில், ஒரு பெட்டி நிறைய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

