'சிசிடிவி' பதிவுகள் 18 மாதம் சேமிக்கும் வசதி: 820 காவல் நிலையங்களில் அறிமுகம்
'சிசிடிவி' பதிவுகள் 18 மாதம் சேமிக்கும் வசதி: 820 காவல் நிலையங்களில் அறிமுகம்
ADDED : மே 08, 2025 05:16 AM

சென்னை: 2020ல், துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோர் சிறையில் இறந்தனர். போலீசார் அடித்தே கொன்று விட்டதாக கூறப்பட்டது.
அதே ஆண்டில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உதவி எஸ்.பி.,யாக பணியாற்றிய ஐ.பி.எஸ்., அதிகாரி பல்வீர்சிங், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் நபர்களின் பற்களை பிடுங்கியதாக, சர்ச்சையில்சிக்கினார்.
இதுபோன்ற காவல் நிலைய மரணங்கள், சித்ரவதைகளை தடுக்க, நாடு முழுதும் உள்ள எல்லா காவல் நிலையங்களிலும், 'நைட் விஷன்' திறனுடன், 'சிசிடிவி கேமரா'க்களை பொருத்த வேண்டும். அதில், பதிவாகும் காட்சிகளை, 18 மாதங்கள் சேமித்து வைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், 1900க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன. இவற்றில் 99 சதவீத காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
தற்போது, கேமரா பதிவுகளின் சேமிப்பு வசதிகளை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. அதற்காக தமிழக அரசு, 45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்டமாக, 820 காவல் நிலையங்களில் உள்ள கேமராக்கள், அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன், பதிவு காட்சிகளை, 18 மாதங்களுக்கு சேமித்து வைக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், 251 காவல் நிலையங்களில், அப்பணி நடந்து வருகிறது. இவ்வாறு கூறினர்.