ADDED : அக் 17, 2026 02:25 AM

கோவை: கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் விஜய் திறந்து வைத்து, நலத்திட்ட உதவி வழங்கினார். இந்த விழாவுக்கு, பயனாளிகள் என்கிற பேட்ச் அணிந்தும், த.வெ.க., கொடி நிறத்தில் கழுத்தில் ரிப்பன், விசிலுடன் வந்திருந்த பெண்களில் சிலர், ‘சி.எம்.சார்... ஒரு நிமிஷம்... 6,000 பெண்கள், தங்கைகள், அக்காக்கள், நண்பிகள்... கண்ணீர் கோரிக்கையை கேளுங்கள்’ என்கிற தலைப்பில் ஒரு பைலை காண்பித்தனர்.
‘இவர்கள் யார், எப்படி உள்ளே நுழைந்தனர், என்ன பைல் காட்டுகின்றனர்’ என போலீசார் விசாரித்தனர். மகளிர் சுய உதவிக் குழு என்கிற பெயரில் நலத்திட்ட உதவி பெற வந்ததாக கூறி, பேட்ச் வாங்கி, விழா அரங்கிற்குள் வந்தது தெரியவந்தது. அவர்கள், தமிழ்நாடு டிஜிட்டல் கல்வி பணியாளர்கள் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள்.
அரசு பள்ளிகளில் ஹைடெக் லேப் நிர்வாகிகளாக பணிபுரிவோருக்கு பணி பாதுகாப்பு, ஊதியம் மற்றும் பணிசார் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முதல்வரிடம் நேரடியாக தெரிவிக்க வேண்டும் என்பதற்காக வந்தது தெரியவந்தது. இதனால், விழா அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
