தரமற்ற மருந்து விபரம் வெளியிடுவதில் மத்திய - மாநில அரசுகள் மோதல்
தரமற்ற மருந்து விபரம் வெளியிடுவதில் மத்திய - மாநில அரசுகள் மோதல்
ADDED : மே 11, 2025 12:59 AM
சென்னை:'தமிழகத்தில் மேற்கொள்ளப்படும், மருந்து தர கட்டுப்பாட்டு ஆய்வுகள் மற்றும் அதன் முடிவுகள், மத்திய அரசின் இணையதளத்தில் முறையாக பதிவேற்றப்படுவதில்லை' என, மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.
நாட்டில் விற்கப்படும் அனைத்து விதமான மருந்துகள், மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள், தொடர் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
மத்திய, மாநில மருந்து தர அதிகாரிகள், திடீர் ஆய்வுகளை செய்து வருகின்றனர். அப்போது கண்டறியப்படும், தரமற்ற மற்றும் போலி மருந்துகள் குறித்த விபரங்களை, ஒவ்வொரு மாநிலமும், மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மாதந்தோறும் அனுப்பி வருகின்றன.
ஒவ்வொரு மாதமும், 10ம் தேதிக்குள் விபரங்கள் பெறப்பட்டு, மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின், https://cdsco.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக, தர கட்டுப்பாட்டு ஆய்வு முடிவு விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை என, மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இதனால், தமிழகத்தில் எந்தெந்த மருந்துகள் தரமற்ற வகையில் உற்பத்தி செய்யப்பட்டன என்பதை அறிய முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரிய குற்றச்சாட்டை, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.
இதுகுறித்து, மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதர் கூறியதாவது:
தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் மருந்து தர ஆய்வு முடிவுகள், மாதந்தோறும் 5ம் தேதிக்குள், மின்னஞ்சல் வாயிலாக மத்திய அரசுக்கு அனுப்பப்படுகின்றன.
மார்ச் மாதத்தில் 24 மருந்துகள்; ஏப்ரலில் 38 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. இந்த விபரங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டும், அவர்கள் தளத்தில் வெளியிடவில்லை.
உண்மைக்கு புறம்பாக, தமிழக அரசு விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று கூறுவது, மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் அலட்சிய போக்கை காட்டுகிறது. தரமான மருந்துகள் மட்டுமே, மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில், தமிழக அரசு உறுதியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.