துவாரகையில் பலகட்ட கடலாய்வு: மத்திய தொல்லியல் துறை முடிவு
துவாரகையில் பலகட்ட கடலாய்வு: மத்திய தொல்லியல் துறை முடிவு
ADDED : ஜன 27, 2025 01:50 AM

சென்னை: குஜராத் மாநிலம் துவாரகாவில், பலகட்ட அகழாய்வுகளை நடத்த, மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில், தற்போதைய சவுராஷ்டிரா பிராந்தியத்தில் துவாரகை உள்ளது. இங்கு புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் அமைந்துஉள்ளது.
மகாபாரதத்தில் கிருஷ்ணர், துவாரகையை தலைமை இடமாக வைத்து ஆட்சி செய்ததாகவும், அவருக்கு பிறகு அது கடலில் மூழ்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே, அப்பகுதியில், புனே டெக்கான் கல்லுாரி, மத்திய தொல்லியல் துறை சார்பில், அகழாய்வுகள் செய்யப்பட்டு, பல்வேறு தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் பலகட்ட அகழாய்வுகளை, மத்திய தொல்லியல் துறை மேற்கொள்ள உள்ளது.
இது குறித்து, மத்திய தொல்லியல் துறை உதவிப் பொது இயக்குனர் அலோக் திரிபாதி கூறியதாவது:
ஏற்கனவே, 2007ல் அங்கு அகழாய்வு செய்தோம். அப்போது, கற்களால் கட்டப்பட்ட கட்டட எச்சங்கள் கிடப்பதை கண்டறிந்தோம். பல காலம் நீருக்கடியில் உள்ளதால், மீன்கள் மற்றும் கடல் தாவரங்கள் அடர்ந்திருந்தன. அவற்றை நீக்கி ஆய்வு செய்தததில், மிகப்பெரிய சுவர், வட்டவடிவ கல் அமைப்புகள் இருப்பதை அறிந்தோம்.
மேலும், கல் நங்கூரம் உள்ளிட்டவை கிடைத்ததால், அங்கு மிகப்பெரிய துறைமுகம் இருந்திருக்கலாம்.
இந்த ஆண்டு முதல், அங்கு தொடர் அகழாய்வுகளை நடத்த உள்ளோம். இது, நாட்டில் நடக்கும் பெரிய கடலடி அகழாய்வாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.