ADDED : ஜன 04, 2025 02:22 AM
சென்னை: மத்திய அரசு உத்தரவுப்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும், அடையாள எண் வழங்குவதற்கான பணிகளை, வேளாண் துறை துவங்க உள்ளது.
நாடு முழுதும், 11.8 கோடி விவசாயிகள் உள்ளனர். தமிழகத்தில், 80 லட்சம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளனர்.
ஐந்து ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ளவர்கள் சிறு விவசாயிகள், அதற்கு மேல் நிலம் வைத்திருப்போர் பெரிய விவசாயிகள் என, வேளாண் துறையால் வகைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மொபைல் செயலி
நாடு முழுதும் விவசாயிகளுக்கு, அடையாள எண் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 'பார்மர்ஸ் ரிஜிஸ்டரி' என்ற பெயரில் மொபைல் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.
இதில் விவசாயிகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அடையாள எண் வழங்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.
இது குறித்து, வேளாண்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இது, ஒவ்வொரு விவசாயிக்கும், ஆதார் எண் போன்றது. இந்த எண்ணை வைத்து தான், வரும் காலங்களில், விவசாயத்திற்கு தேவையான உதவிகளை, மத்திய, மாநில அரசுகள் வழங்கும்.
வங்கி கடன் பெறுதல் உள்ளிட்ட சேவைகளுக்கும், இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கூடுதல் விபரங்களுக்கு, உதவி வேளாண் அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர்களை, விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.