பரமக்குடி- - ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்
பரமக்குடி- - ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்
ADDED : ஜூலை 02, 2025 06:29 AM

பரமக்குடி - -ராமநாதபுரம் இடையே, 1,853 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 46.7 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழி சாலை அமைக்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இருவழிச்சாலை
அமைச்சரவை கூட்டத்துக்கு பின், மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறியதாவது:
தமிழகத்தின் மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி ஆகிய பகுதிகளுக்கு இடையேயான இணைப்பு, தேசிய நெடுஞ்சாலை எண் 87 மற்றும் அதனுடன் தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகளைச் சார்ந்து உள்ளது.
பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரை, இது இருவழிச்சாலையாக உள்ளது. இதனால் மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளிலும், முக்கிய நகரங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே பரமக்குடியிலிருந்து ராமநாதபுரம் வரையிலான 46.7 கி.மீ., நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது. 1,853 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், நிலம் கையகப்படுத்த மட்டும் 350 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
முக்கிய பங்கு
இந்த நான்கு வழிச்சாலை திட்டம் அமலுக்கு வந்தால் வாகன வேகம் மணிக்கு 50 கி.மீ., என்பது 80 கி.மீ., உயரும். பயண நேரம் 60 நிமிடங்களில் இருந்து 35 நிமிடங்களாக குறையும். விபத்துகள் குறையும்.
திட்டம் முடிவடைந்தவுடன், பரமக்குடி- - ராமநாதபுரம் பகுதி, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -