பாதுகாப்பு சிக்கல்களுக்கு தீர்வு தரும் 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூ.22 கோடி பரிசு
பாதுகாப்பு சிக்கல்களுக்கு தீர்வு தரும் 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூ.22 கோடி பரிசு
ADDED : ஆக 09, 2025 11:56 PM
சென்னை:நாட்டின் பாதுகாப்பு தொடர்பான, 12 பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வுகளை, ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கும், 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்கள் மற்றும் மாணவர்களுக்கு, 22.56 கோடி ரூபாய் பரிசுகளை, மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் கீழ், என்.சி.ஐ.ஐ.பி.சி., எனப்படும் தேசிய முக்கிய தகவல் உள்கட்டமைப்பு பாதுகாப்பு மையம் செயல்படுகிறது. இது, நம் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், சுகாதாரம் போன்றவற்றின் முக்கிய தகவல்களை, 'சைபர்' தாக்குதலில் இருந்து பாதுகாத்து வருகிறது.
தற்போது, நாட்டின் முக்கியமான தேசிய பாதுகாப்பு தேவைகளுக்கு ஏற்ற தீர்வுகளை, ஏ.ஐ., என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக உருவாக்க, 'ஸ்டார்ட்அப்' எனப்படும், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் மாணவர்களுக்கு போட்டியை அறிவித்து உள்ளது.
இதன் வாயிலாக, சைபர் பாதுகாப்பு மற்றும் தடய வியல், 'பிக் டேட்டா' பகுப்பாய்வு, புவிசார் பாதுகாப்பு உள்ளிட்ட, 12 சிக்கல்களுக்கு சிறந்த தீர்வுகளை உருவாக்க வேண்டும். முதல் மூன்று நிலைகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, மொத்தம், 22.56 கோடி ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு, 'form.startuptn.in/NCIIPC' என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய, வரும், 15ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.