நிபுணர்கள் கூறிய திருத்தங்கள் செய்யவில்லை: கீழடி அறிக்கை குறித்து மத்திய அரசு விளக்கம்
நிபுணர்கள் கூறிய திருத்தங்கள் செய்யவில்லை: கீழடி அறிக்கை குறித்து மத்திய அரசு விளக்கம்
UPDATED : மே 30, 2025 02:48 AM
ADDED : மே 30, 2025 12:21 AM

'கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பான வரைவு அறிக்கையின் மீது, நிபுணர்கள் கூறிய திருத்தங்கள் செய்யப்படவில்லை. உண்மை இவ்வாறு இருக்கையில், அறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்லியல் துறை அக்கறை காட்டவில்லை என்று கூறுவது சரியல்ல' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பரிந்துரை
தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கத்தை மத்திய கலாசார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கை வெளியீடு குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகிஉள்ளன.
அகழ்வாராய்ச்சி செய்த இடங்களின் அறிக்கைகளை இந்திய தொல்லியல் துறை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு அகழ்வாராய்ச்சி பணியிலும் அதிக நேரம், ஆற்றல் மற்றும் பணம் செலவிடப்படுவதால் இந்த அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அகழ்வாராய்ச்சியாளர்கள் தயாரிக்கும் அறிக்கைகள், நிபுணர்கள் பரிசீலனைக்கு அனுப்பப்படும். நிபுணர்கள் பரிந்துரைக்கும் மாற்றங்கள், அகழ்வாராய்ச்சி செய்தவர்களால் பரிசீலிக்கப்பட்டு, இறுதி யாக மீண்டும் சமர்ப்பிக்கப் படுகின்றன.
பின்னர், இவை இந்திய தொல்லியல் துறையின் குறிப்புகளாக வெளியிடப்படுகின்றன.
கீழடி அறிக்கையிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டு, அகழ்வாய்வில் ஈடுபட்டோரின் அறிக்கையானது, நிபுணர்களின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.
அதன்படி, கீழடியின் அகழ்வாராய்ச்சியாளரால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு அறிக்கையில் தேவையான திருத்தங்களை செய்வதற்கான நிபுணர்களால் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுஉள்ளன.
ஆனால் அவர்கள் தற்போதுவரை திருத்தம் செய்யவில்லை.
மறுக்கிறோம்
ஆனால், அகழ்வாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிடுவதில், தொல்லியல் துறை அக்கறை காட்டவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது, இந்த விவகாரத்தை தவறாக வழி நடத்துகிறது; இது, உண்மைக்கு புறம்பானது; இதை கடுமையாக மறுக்கிறோம்.
ஒரு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்தின் முக்கியத்துவத்தை, தலைமை இயக்குநரும், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகளும் புரிந்து கொள்கின்றனர்.
ஆனால் அனைத்து அறிக்கைகளும் வெளியீட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன், முறையான ஆய்வு, திருத்தம், சான்று வாசிப்பு மற்றும் வடிவமைப்பு தேவையாக உள்ளது.
கீழடி அறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்லியல் துறை அக்கறை காட்டவில்லை என்பது ஒரு கற்பனை கதை. இது வேண்டுமென்றே துறையை தவறாக சித்தரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
ஊடகங்கள் ஒரு விஷயத்தின் நுணுக்கங்களை புரிந்துகொண்டு, அதிலும் தொல்லியல் போன்ற தொழில்நுட்ப விஷயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து, வெளியிடுவதற்கு முன், முழுமையான புரிதலை ஏற்படுத்திக் கொள்ளும்படி, இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -

