9 ஆண்டுகளாக பதில் சொல்லாத மத்திய அரசு; பொறுமையிழந்து அபராதம் விதித்தது ஐகோர்ட்
9 ஆண்டுகளாக பதில் சொல்லாத மத்திய அரசு; பொறுமையிழந்து அபராதம் விதித்தது ஐகோர்ட்
ADDED : அக் 01, 2025 08:03 AM

மதுரை; கடல்வழி பயணத்தில் கொலைக்கு மரண தண்டனை, பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின்படி பொய் சாட்சியம் அளித்தால் மரண தண்டனை விதிக்கும் பிரிவை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், ஒன்பது ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யாததால் இரு வழக்குகளிலும் மத்திய அரசுக்கு தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.
மரண தண்டனை மதுரை, ரமீஸ் அஜ்மல்கான் 2016ல் தாக்கல் செய்த பொதுநல மனு:
கடல்வழி பயணம் மற்றும் கடல் திட்டு மீதான நிலையான தளங்களின் பாதுகாப்பிற்கு எதிரான சட்டவிரோத செயல்களை தடுக்கும் சட்டத்தின் ஒரு பிரிவின் கீழ், கடல்வழி பயணத்தின்போது ஒருவர் கொலை குற்றத்தில் ஈடுபட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்க வழிவகை உள்ளது.
இச்சட்டப்பிரிவு அரசியலமைப்பு சட்டம், தனிமனித உரிமைக்கு எதிரானது.
எந்த ஒரு சட்டமாக இருந்தாலும், அரசியலமைப்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இச்சட்டப்பிரிவின் மூலம் நீதிமன்றத்தின் உரிமை பாதிக்கப்படுகிறது.
நீதிமன்ற சீராய்வு என்பது நீதிமன்றத்தின் முக்கிய நடைமுறை. அச்சட்டப்பிரிவு அவ்வாய்ப்பை கொடுக்கவில்லை. கடல்வழி பயணத்தில் கொலை செய்தால், மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
திருச்சி, ஸ்ரீரங்கம் சாஷிம் சாகர் 2017ல் தாக்கல் செய்த பொதுநல மனு:
பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின்படி, அவர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில், சம்பந்தப்பட்டவருக்கு எதிராக நீதிமன்றம் தண்டனை விதிக்கிறது.
அப்பிரிவைச் சேராத ஒருவர் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவருக்கு எதிராக பொய் சாட்சியம் அளித்து மரண தண்டனை விதிக்க வழிவகுத்தால், பொய் சாட்சியம் அளித்த நபருக்கு மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆயுள் கைதி சிறையில் இருக்கும் போது, கொலை குற்றத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கும் நடைமுறை இருந்தது; அதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் மூலம், ஒருவரை கொலை செய்தால், மரண தண்டனை விதிக்கும் நடைமுறையையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
ஒத்திவைப்பு எந்தெந்த குற்றங்களுக்கு எத்தகைய தண்டனை விதிக்க வேண்டும் என்பது நீதிமன்ற அதிகார வரம்பிற்குட்பட்டது.
இதில், பார்லிமென்ட் தலையிட முடியாது. பொய் சாட்சியம் என நிரூபணமாகி, சாட்சியமளித்தவருக்கு மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யும் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவிற்கு தடை விதிக்க வேண்டும். அது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் மகபூப் ஆத்திப் ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இவ்வழக்குகளில் எதிர்மனுதாரர்களான மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலர், மத்திய சட்டத்துறை செயலர், உள்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய இறுதி வாய்ப்பை நீதிமன்றம் வழங்கியது. அவர்கள் தாக்கல் செய்யவில்லை.
இதற்காக இரு வழக்குகளிலும் தலா, 10,000 ரூபாயை உயர் நீதிமன்ற சட்ட பணிகள் ஆணை குழுவிற்கு செலுத்த வேண்டும்.
பதில் மனு தாக்கல் செய்ய நான்கு வாரங்கள் அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. விசாரணை அக்., 24க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.