sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விமான சேவையில் தமிழகத்தை புறக்கணிக்கிறது மத்திய அரசு; 10 ஆண்டுகளாக புதிய ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை

/

விமான சேவையில் தமிழகத்தை புறக்கணிக்கிறது மத்திய அரசு; 10 ஆண்டுகளாக புதிய ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை

விமான சேவையில் தமிழகத்தை புறக்கணிக்கிறது மத்திய அரசு; 10 ஆண்டுகளாக புதிய ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை

விமான சேவையில் தமிழகத்தை புறக்கணிக்கிறது மத்திய அரசு; 10 ஆண்டுகளாக புதிய ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை

24


UPDATED : ஜூலை 10, 2025 04:01 AM

ADDED : ஜூலை 09, 2025 10:20 PM

Google News

UPDATED : ஜூலை 10, 2025 04:01 AM ADDED : ஜூலை 09, 2025 10:20 PM

24


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இருதரப்பு விமான சேவை தொடர்பாக, மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொண்ட ஒப்பந்தங்களில், தமிழகத்திற்கு எந்த முக்கியத்துவமும் முன்னுரிமையும் தரப்படவில்லை. இங்குள்ள இரண்டாம் நிலை விமான நிலையங்கள், மத்திய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், துாத்துக்குடி நகரங்களில் விமான நிலையங்கள் செயல்படுகின்றன. வேலுார் மற்றும் நெய்வேலி யில், மத்திய அரசின், 'உடான்' திட்டம் வாயிலாக, விமான நிலையங்கள் அமைக் கும் பணிகள் நடக்கின்றன.

காஞ்சிபுரம் அடுத்த பரந்துாரில், 2030ம் ஆண்டுக்குள், 10 கோடி பயணியரை கையாளும் வகையில், புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் துவங்க உள்ளன.

குறிப்பாக, தமிழகத்தில் இயங்கும் அனைத்து விமான நிலையங்களும், 'கிளஸ்டர்' தரவரிசை 1 மற்றும் 2ம் நிலையில் இருக்கின்றன.

குற்றச்சாட்டு


விமானப் போக்குவரத்தில், தமிழகம் கணிசமான வளர்ச்சி அடைந்து வந்தாலும், சர்வதேச சேவைகளை அதிகரிக்க, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

பொதுவாக சர்வதேச விமான சேவையில், இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு விமான போக்குவரத்து ஒப்பந்தங்கள் செய்வது வழக்கம்.

இதில் விமானங்கள் வகை, 'பாயின்ட் ஆப் கால்' என்ற அனுமதிக்கப்பட்ட நகரங்களுக்கான பட்டியல், இடைநிறுத்தங்கள், வாராந்திர விமான சேவை எண்ணிக்கை, பயணியர் இருக்கை எண்ணிக்கை உள்ளிட்ட முக்கிய விபரங்கள் இடம்பெறும்.

இதன் அடிப்படையில் தான், விமான நிறுவனங்கள் சேவை வழங்கும். அதாவது, இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையிலான ஒப்பந்தத்தில், அனுமதிக்கப்பட்ட நகரங்களுக்கான பட்டியலில், சென்னை அல்லது திருச்சி இருந்தால் மட்டுமே, இங்கிருந்து விமானங்களை இயக்க முடியும்.

கடந்த 2014 முதல் 60க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் புதிதாகவும், திருத்தப்பட்டும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இவற்றில், தமிழகத்திற்கு சாதகமாக எதுவும் இல்லை.

தனியார் விமான நிலையங்களுக்கு முன்னுரிமை தரும் வகையிலேயே, தொடர்ந்து ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.இதன் வாயிலாக, மத்திய அரசு விமானப் போக்குவரத்தில் தமிழகத்தை புறக்கணிப்பது வெளிச்சமாகி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கும்.

இதுகுறித்து, விமான போக்குவரத்து ஆராய்ச்சியாளர் எச்.உபையதுல்லாஹ் கூறியதாவது:

இந்தியாவில் விமான போக்குவரத்துக்காக போடப்பட்ட இருதரப்பு விமான ஒப்பந்தங்களில், 75 சதவீதம் வளைகுடா நாடுகளை சார்ந்துள்ளன. இவற்றில், ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய், அபுதாபி, சார்ஜாவுக்கான விமான ஒப்பந்தங்கள் முக்கியமானவை.

ஏனெனில், இவற்றில்தான் வாராந்திர பயணியர் இருக்கை எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும், 100 சதவீதம் பயன்படுத்தப்பட்டு விட்டன.

தமிழகத்தில், இரண்டாம் நிலை நகரங்களாக உள்ள திருச்சி, கோவை, மதுரை யில் இருந்து, முக்கிய இடங் களுக்கு சர்வதேச சேவைகள் இல்லை. 'பாயின்ட் ஆப் கால்' பட்டியலில், மத்திய அரசு இந்த நகரங்களை சேர்க்கவில்லை.

அதே சமயம், மற்ற மாநிலங்களில் உள்ள அமிர்தசரஸ், லக்னோ, கோவா, ஜெய்ப்பூர் போன்ற இரண்டாம் நிலை விமான நிலையங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நகரங்களுக்கான பட்டியலில், தமிழக நகரங்களை மத்திய அரசு சேர்க்காததால், இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2014ல் இருந்து இதுவரை 60க்கும் அதிகமான இருதரப்பு விமான சேவை ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஓமன் மற்றும் சவுதி அரேபியா நாடுகளுடனான ஒப்பந்தங்கள், இருமுறை புதுப்பிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்திலும், ஏற்கனவே இருந்த அனுமதிக்கப்பட்ட நகரங்கள் மட்டுமே நீடிக்கின்றன. தமிழக நகரங்கள் சேர்க்கப்படவில்லை.

திருச்சி, கோவை, மதுரையில் இருந்து துபாய் மாதிரியான இடங்களுக்கு செல்ல அதிக தேவை இருந்தும், இந்த நகரங்களை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சேர்க்கவில்லை.

கோரிக்கை


திருச்சியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு விமான சேவை வழங்க, அந்நாட்டு அமைச்சகம் மத்திய அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், மத்திய அரசு பரிசீலிக்கவில்லை.

இதே நிலை தொடர்ந்தால் டில்லி, மும்பை போன்ற தனியார் மெட்ரோ விமான நிலையங்களுக்கு அதிக கிராக்கி ஏற்படும்.

தமிழக மக்கள் அதிக கட்டணம் செலுத்தி, தனியார் விமான நிலையங்களை நாடிச்சென்று பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, தமிழக நகரங்களுக்கு சர்வதேச விமான சேவையில் முன்னுரிமை அளிக்க, மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

தமிழக அரசு பாராமுகம்


விமான போக்குவரத்தில் தமிழகத்துக்கு எந்த முன்னுரிமையும் அளிக்காமல், மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. அரசு துறைகளுக்கு நிதி வராவிட்டால், மத்திய அரசை குறைகூறி, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் தமிழக அரசு, விமான போக்குவரத்தில் புறக்கணிப்பது குறித்து கண்டுகொள்வதில்லை. ஆளுங்கட்சியான தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு, 39 எம்.பி.,க்கள் உள்ளனர்.
இவர்கள், விமான போக்குவரத்தில் தமிழகம் புறக்கணிக்கப்படுவது குறித்து பார்லிமென்டில் குரல் எழுப்புவதில்லை.புதிதாக வெளிநாட்டு நகரங்களுக்கு சென்னையில் இருந்து விமானங்கள் இயக்க, மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழக அரசும் பாராமுகமாக இருந்தால், பாதிப்பு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும்தான்.



ஒப்பந்தங்கள் விபரம்


மொத்த நாடுகள்57முக்கிய நாடுகள்ஓமன், சவுதி அரேபியா, தாய்லாந்து, பிரான்ஸ், ஜப்பான், மொரீஷியஸ், ரஷ்யா.இதில் எந்த ஒப்பந்தத்திலும் தமிழக விமான நிலையங்கள் சேர்க்கப்படவில்லை.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us