'மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது'; கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு
'மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது'; கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு
ADDED : பிப் 13, 2025 07:31 AM

விழுப்புரம்; 100 நாள் வேலை திட்ட பட்டியலில் இருந்து, பயனாளிகள் பெயரை அகற்றியது தான், மத்திய அரசின் மிகப்பெரிய சாதனை என, கனிமொழி எம்.பி., கூறினார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., மகளிர் மற்றும் தொண்டரணி நிர்வாகிகள், ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கனிமொழி எம்.பி., பேசியதாவது:
திராவிட ஆட்சி காலத்தில்தான் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது. பெரிய அளவில் பெண்கள் முன்னேற்றம் உள்ளதாக கூறும் நாடுகள், சமீபத்தில்தான் பெண்களுக்கு ஓட்டுரிமை தந்தனர்.
பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் ஓரிடத்தில் கூட உச்சரிக்கப்படவில்லை. இந்தியா முழுவதும் 84 லட்சம் பயனாளிகள் பெயர்கள், 100 நாள் பணி திட்ட பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இது தான் மத்திய அரசின் மிகப்பெரிய சாதனை.
பா.ஜ., ஆட்சி ஒவ்வொரு ஆண்டும் நிதியை குறைத்து கொண்டு வருகிறது. தமிழகத்திற்கு கல்விக்கு கிடைக்க வேண்டிய, 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான நிதி, இந்தி பயில ஒப்புக்கொள்ளாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
100 நாள் திட்டத்திற்கான பணம் தற்போது வரை தரவில்லை. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திற்கும், மத்திய அரசு தருவதில்லை.
தமிழக மக்களை பிடிக்கவில்லை என்பதற்காக தொடர்ந்து மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது. தேர்தல் நாடகம் ஆடி, 'நாங்கள் வேறு, அவர்கள் வேறு' என அ.தி.மு.க., இங்கு பொய் கூறி கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினர்.

