மத்திய அரசு தாராளம்; தமிழகம் அலட்சியம் 3 மாத ரேஷன் அரிசி மொத்தமாக கிடைக்குமா?
மத்திய அரசு தாராளம்; தமிழகம் அலட்சியம் 3 மாத ரேஷன் அரிசி மொத்தமாக கிடைக்குமா?
ADDED : மே 24, 2025 01:17 AM
சென்னை:தமிழகத்தில் முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, மூன்று மாதங்களுக்கான அரிசி, கோதுமையை சேர்த்து வழங்க, மத்திய அரசு முன்வந்துள்ளது. இதை வாங்குவதற்கு ஒப்புக்கொண்ட தமிழக அரசு, ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு மூன்று மாதங்களுக்கான அரிசியை, ஒரே தவணையில் வழங்காமல் அலட்சியம் காட்டுகிறது.
தமிழக ரேஷன் கடைகளில் அரிசி பிரிவில், 92.95 லட்சம் முன்னுரிமை; 18.45 லட்சம் அந்தியோதயா; 1.10 கோடி முன்னுரிமையற்றவை என, 2.21 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. முன்னுரிமை கார்டுக்கு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா, 5 கிலோ அரிசி இலவசமாகவும், அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, 35 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதற்கான அரிசியை, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது. அதன்படி, அந்தியோதயா பிரிவுக்கு, 62,621 டன் அரிசியும், முன்னுரிமை பிரிவுக்கு, 1.43 லட்சம் டன் அரிசியும் மாதம்தோறும் மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படுகிறது.
இதில் கார்டுதாரர்கள் தங்களுக்கான அரிசி ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட எடையில் அரிசிக்கு பதில் கோதுமையை இலவசமாக வாங்கலாம். இதற்காக மாதம், 8,576 டன் கோதுமையையும், மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது.
நாடு முழுதும் விவசாயிகளிடம் இருந்து, கடந்த சீசனில் மிக அதிகளவில் கோதுமை, அரிசியை மத்திய அரசின் இந்திய உணவு கழகம் கொள்முதல் செய்துள்ளது. நடப்பு சீசனிலும் அவற்றின் வரத்து அதிகரித்துள்ளது.
எனவே, வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு உரிய அரிசி, கோதுமையை ஒரே தவணையில், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க, மத்திய அரசு முன்வந்துள்ளது. இந்த விபரம், மாநிலங்களுக்கு தெரிவிக்கபட்டுள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கான அரிசி, கோதுமையை, ரேஷனில் ஒரே தவணையில் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆனால், தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கான அரிசி, கோதுமையை ஒரே தவணையில் வழங்க, தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முன்னுரிமை, அந்தியோதயா பிரிவுகளுக்கு, மத்திய அரசு இலவசமாக அரிசி வழங்கும் நிலையில், தமிழக அரசு, 1.10 கோடி முன்னுரிமையற்ற கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசிக்கு மட்டும் செலவு செய்கிறது.
தற்போது, முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கான மூன்று மாதங்களுக்கான அரிசியை ஒரே தவணையில் பெற்று கொள்வதாக, மத்திய அரசுக்கு, தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆனால், தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு, ஒரே தவணையில் மூன்று மாதங்களுக்கான அரிசியை வழங்குவது தொடர்பாக, எந்த முடிவையும் தெரிவிக்காமல் உள்ளது.
இதற்கு, அந்தியோதயா, முன்னுரிமை கார்டுதார்களுக்கு, மூன்று மாதங்களுக்கான அரிசியை சேர்த்து வழங்கும்போது, முன்னுரிமையற்ற அரிசி கார்டுதாரர்களுக்கும் வழங்க வேண்டியிருக்கும். இதற்காக, தமிழக அரசுக்கு திடீரென கூடுதல் செலவு ஏற்படும்.
இதனால் தான், ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரே தவணையில் மூன்று மாத பொருட்களை வழங்குவது குறித்து, எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

