ஆர்.டி.ஐ., மனு கட்டணத்திற்கு 'கோர்ட் ஸ்டாம்ப்' ஏற்க மறுக்கும் மத்திய அரசு அலுவலகங்கள்
ஆர்.டி.ஐ., மனு கட்டணத்திற்கு 'கோர்ட் ஸ்டாம்ப்' ஏற்க மறுக்கும் மத்திய அரசு அலுவலகங்கள்
ADDED : ஆக 25, 2025 01:10 AM
சென்னை: ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்கள் அளிக்கும் போது, 10 ரூபாய் கட்டணத்துக்கு ஒட்டப்படும், கோர்ட் ஸ்டாம்ப் எனப்படும், நீதிமன்ற வில்லையை, மத்திய அரசு அலுவலகங்கள் ஏற்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மத்திய - மாநில அரசு துறைகள் தொடர்பான தகவல்களை கேட்போர், அதற்கான விண்ணப்பத்தில், 10 ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும்.
இல்லையெனில், போஸ்டல் ஆர்டர், 'டிடி' எனப்படும் வங்கி வரைவோலை வாயிலாக கட்டணத்தை செலுத்தலாம் அல்லது கட்டணத்தை ரொக்கமாக அரசு கருவூலத்தில், சம்பந்தப்பட்ட துறையின் கணக்கில் செலுத்தலாம்.
ஆனால், சமீப நாட்களாக, ஆர்.டி.ஐ., விண்ணப்பங்களில், கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டினால், அவற்றை மத்திய அரசு அலுவலகங்கள் ஏற்பதில்லை என்ற புகார் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தன்னார்வ வானிலை ஆர்வலரான ேஹமசந்தர் கூறியதாவது:
குறிப்பிட்ட சில தகவல்கள் கோரி, ஆர்.டி.ஐ., சட்டப்படி, சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்துக்கு மனு அனுப்பினேன். அதில், 10 ரூபாய் கட்டணத்துக்கு, கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டியிருந்தேன்.
அந்த மனுவை ஏற்க முடியாது எனக்கூறி, அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர்.
கோர்ட் ஸ்டாம்ப் வாயிலாக செலுத்தப்படும் கட்டணங்களை ஏற்க மாட்டோம், போஸ்டல் ஆர்டர், 'டிடி'யாகவே கட்டணம் செலுத்த வேண் டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள, ஆர்.டி.ஐ., சட்ட விதிகளில், கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டலாம் என்று குறிப்பிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், அதைக் கடைப்பிடிக்க மறுப்பது புதிராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் எங்கள் அலுவலகம் இருந்தாலும், மத்திய அரசின் ஆர்.டி.ஐ., சட்ட விதிகளின்படியே, நாங்கள் செயல்பட முடியும். மத்திய அரசின் விதிகளில், கோர்ட் ஸ்டாம்ப் பயன்படுத்த அனுமதி இல்லை.
அதனால், மத்திய அரசு அலுவலகங்களுக்கு மனு அளிப்போர், கட்டணங்களை போஸ்டல் ஆர்டர், 'டிடி' வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.