மாநில அரசின் துறைமுகங்களை மேம்படுத்த மத்திய அரசு திட்டம்
மாநில அரசின் துறைமுகங்களை மேம்படுத்த மத்திய அரசு திட்டம்
ADDED : அக் 11, 2025 01:10 AM
சென்னை:மாநில அரசின் கீழ் செயல்படும் துறைமுகங்களை தேர்வு செய்து, புதிய திட்டங்கள் வாயிலாக மேம்படுத்த, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சம் திட்ட மிட்டுள்ளது.
நாட்டில், 12 பெரிய துறைமுகங்கள் உட்பட, 200க்கும் மேற்பட்ட துறைமுகங்கள் உள்ளன. இந்த துறைமுகங்களை நவீனமாக்கி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை அதிகரிக்க, மத்திய கப்பல் போக்குவரத்து துறை, 'சாகர்மாலா' போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மாநிலங்களில் பெரிய துறைமுகங்களை அடுத்துள்ள, இரண்டாம் நிலை துறைமுகங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளும், அதற்கான அறிக்கை விபரங்களையும், மத்திய போக்குவரத்து அமைச்சகம் கேட்டுள்ளது.
இது குறித்து, மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை செயலர் ராமச்சந்திரன் கூறியதாவது:
நாட்டில் மொத்தம், 200க்கும் மேற்பட்ட துறைமுகங்கள் உள்ளன. இதில், 12 துறைமுகங்களை தவிர, மற்றவை சிறிய துறைமுகங்களாக செல்படுகின்றன.
இதில், நல்ல வாய்ப்புள்ள துறைமுகங்களை தேர்வு செய்து நவீனமாக்கி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை அதிகரிக்க, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
தமிழகம், ஒடிஷா, குஜராத், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களிடம் திட்ட அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இதில், துறைமுகங்களின் தற்போதைய நிலை, நிலப்பரப்பு, என்னென்ன வாய்ப்புகள், மாநில அரசின் விருப்பம், முதலீடு அளவு, தனியார் பங்களிப்பு உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்படும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் தலா ஒரு துறைமுகத்தை தேர்வு செய்து, மாநில அரசின் பங்களிப்போடு மேம்படுத்தப்படும். கூடுதல் 'பர்த்' அமைப்பது, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, ரயில்கள், சாலை போக்குவரத்து இணைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். சர்வதேச சுற்றுலா கப்பல்களையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
'லக்' அடிக்க வாய்ப்பு!
மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ், சென்னை, துாத்துக்குடி, எண்ணுார் ஆகிய மூன்று பெரிய துறைமுகங்கள் செயல்படுகின்றன.
இது தவிர, கடலுார், நாகப்பட்டினம், பாம்பன், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய சிறு துறைமுகங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இவற்றில் எந்த துறைமுகத்திற்கு, 'லக்' அடிக்கப் போகிறதோ, தெரியவில்லை!