ADDED : ஜன 20, 2024 12:04 AM

நெகமம்:நெகமம், ஜக்கார்பாளையத்தில், பா.ஜ., சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் நம்ம ஊரு பொங்கல் விழா நிகழ்ச்சி நடந்தது.
நெகமம் அருகே உள்ள ஜக்கார்பாளையத்தில், பா.ஜ., சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில், உத்தரபிரதேச மாநில முன்னாள் துணை முதல்வரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான தினேஷ் ஷர்மா பங்கேற்றார்.
கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமை வகித்தார். கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றிய தலைவர் சுரேஷ்குமார் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள், தபால் துறையினர், வங்கி பணியாளர்கள், மருத்துவ துறை மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். மகளிருக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டது.
இதை ராஜ்யசபா எம்.பி., பார்வையிட்டு பொதுமக்களிடையே பேசினார்.
அப்போது, ''மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் தமிழகத்தில் மக்களுக்கு முறையாக சென்றடைவதில்லை. எனவே, மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் மக்களை முறையாக சென்றடைய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
''விகாஷ் பாரத் சங்கல்ப யாத்ரா திட்டத்தின் வாயிலாக, தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும்.
அரசின் திட்டங்கள் பற்றி அதிகாரிகள் வாயிலாக, கிராமம் தோறும் பொதுமக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்,'' என்றார்.