மணல் குவாரிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது மத்திய அரசு
மணல் குவாரிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது மத்திய அரசு
ADDED : டிச 12, 2025 03:44 AM

சென்னை: மணல், கல் குவாரி கள் துவங்க, சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுதும் குவாரிகள் அமைப்பது மற்றும் தொழில், கட்டுமான திட்டங்களை துவக்க, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும்.
சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின், மாநில அல்லது மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஒப்புதலையும், பணிகளை துவங்குவதற்கான அனுமதியையும் தனியாக பெற வேண்டும்.
பெரிய அளவிலான கட்டுமான திட்ட பணிகளுக்கு, இதில் பிரச்னை இல்லை. ஆனால், மணல், கல் குவாரிகள் விஷயத்தில், இந்த நடைமுறையை பின்பற்றுவதில், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதை கருத்தில் வைத்து, மணல், கல் குவாரிகள் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றபின், பணிகளை துவங்க தனியாக அனுமதி பெறும் நடைமுறையில் விலக்கு அளித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற நிறுவனங்கள், எப்போது வேண்டுமானாலும் குவாரிகளை துவங்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை பிறப்பித்த உத்தரவு:
மணல், கல் குவாரிகள் போன்ற சிறு கனிமங்களுக்கான சுரங்க பணிகளுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பணியின்போதே, மாசு கட்டுப்பாடு வாரியங்களின் ஒப்புதல் பெறப்படுகிறது.
இதில் சுற்றுச்சூழல் அனுமதிக்கு பின், மீண்டும் அதே துறையிடம் பணிகளை துவக்க தனியாக அனுமதி பெற வேண்டாம்.
இதில், 2024 நவ., 12க்கு முன் சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும், பணிகளை துவங்க அனுமதி பெறுவது கட்டாயம். அதற்கு பின் அனுமதி பெற்றவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

