100 நாள் வேலை திட்ட நிலுவை தொகை ரூ.2,999 கோடி வழங்கியது மத்திய அரசு
100 நாள் வேலை திட்ட நிலுவை தொகை ரூ.2,999 கோடி வழங்கியது மத்திய அரசு
ADDED : மே 02, 2025 12:58 AM
சென்னை:நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத்தொகை, 2,999 கோடி ரூபாயை, ஆறு மாத இழுபறிக்கு பின், மத்திய அரசு விடுவித்துள்ளது.
தமிழகத்தில், மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், சாலைகள் அமைத்தல், நீர்நிலைகள் பராமரிப்பு, மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இத்திட்ட பணியாளர்களுக்கு, ஒருநாள் கூலியாக, 314 ரூபாய் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மானியத்தொகை 4,416 கோடி ரூபாயை, 2024 நவம்பர் முதல் மத்திய அரசு நிறுத்தி வைத்தது.
இதில், பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம், 3,170 கோடி ரூபாய். இயந்திர தளவாடங்கள் பயன்பாட்டிற்கான செலவுத்தொகை, 1,246 கோடி ரூபாய். மத்திய அரசு நிதியை விடுவிக்காததால், தமிழகத்தில் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
அரசிடம் இருந்து ஊதியம் கிடைக்காததால், 100 நாள் வேலையை நம்பியிருந்த பணியாளர்கள் தவித்தனர். நிலுவைத்தொகை, 4,416 கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் கனிமொழி, நிதித்துறை செயலர் உதயசந்திரன், ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் பேடி ஆகியோர் டில்லி சென்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து நிதியை விடுவிக்கும்படி வலியுறுத்தினர்.
இந்நிலையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிலுவைத் தொகையில், 2,999 கோடி ரூபாயை விடுவிக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
முதற்கட்டமாக, 1,111கோடி ரூபாய், ஊழியர்களின் ஊதியமாக வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஒரு வாரத்திற்குள், எஞ்சிய ஊதிய நிலுவைத் தொகையும், இயந்திர தளவாடப் பயன்பாட்டிற்கான நிலுவை தொகையும் விடுவிக்கப்படும் என, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட இயக்குநரகம் உறுதி அளித்துள்ளது.
ஆறு மாத இழுபறிக்கு பின், நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டு உள்ளதால், தமிழக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

