மாட்டிறைச்சி ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்த வேண்டும்: பசு வதையை தடுக்க ஆர்ஆர்.கோபால்ஜி வலியுறுத்தல்
மாட்டிறைச்சி ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்த வேண்டும்: பசு வதையை தடுக்க ஆர்ஆர்.கோபால்ஜி வலியுறுத்தல்
ADDED : ஜன 19, 2026 05:14 AM

சென்னை: சென்னை மேற்கு மா ம்பலத்தில், ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் டிரஸ்டின், 'கோ ஸம்ரக்ஷண சாலா' சார்பில், 50வது ஆண்டு மாட்டுப் பொங்கல், 'கோ பூஜை' விழா நடந்தது.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, 'தினமலர்' நாளிதழ் திருச்சி, வேலுார் பதிப்பு வெளியீட்டாளர் ஆர்ஆர்.கோபால்ஜி பேசியதாவது:
மன்னர்கள் காலத்தில், ஒரு நாட்டை பிடித்தனர் என்றால், முதலில் அந்த நாட்டிலிருந்து பெரும் செல்வமாகக் கருதப்படும் பசுக்களையே ஓட்டிச்செல்வர். தவிர, அங்குள்ள பசுக்களை கொல்ல மாட்டார்கள். ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு முன், நம் நாட்டின் மீது நடந்த இஸ்லாமிய படையெடுப்புகளின் போது, பசு வதையில் ஈடுபட்டனர்.
பூரண சுதந்திரம்
'இந்த நாட்டில் பசு வதை எப்போது தடை செய்யப்படுகிறதோ, அன்று தான் இந்த நாட்டுக்கு பூரண சுதந்திரம் கிடைத்ததாகும்' என்றார் மகாத்மா காந்தி. சுதந்திரத்திற்கு முன் பொதுக் கூட்டங்களில் பேசிய நேரு, 'நான் பிரதமரானால் என் முதல் கையெழுத்து பசு வதை ஒழிப்பாகவே இருக்கும்' என்றார். ஆனால், அவர் சொன்னது போல நடக்கவில்லை.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பசுக்களை வதை செய்ய, 350க்கும் அதிகமான கூடாரங்களை ஏற்படுத்தி, ஒரு நாளைக்கு 30,000 நாட்டு மாடுகள் வீதம், ஒரு ஆண்டில் ஒரு கோடிக்கும் அதிகமான மாடுகளை வதைத்தனர்.
அதன்பின், 'ஜெர்ஸி' என்ற வெளிநாட்டு கலப்பின மாடுகளை கொண்டு வந்தனர். இதையடுத்து, விவசாயத்திற்கு கூட நாம் அவர்களை சார்ந்திருக்க வேண்டும் என்ற நோக்கில், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை கொண்டு வந்தனர்.
நம் குடும்ப உறுப்பினராக பசுக்கள் இருந்த போது, அதிலிருந்து கிடைத்த பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் மற்றும் மாட்டுச் சாணம், பஞ்ச கவ்யம் உருவாக்க பயன்படுத்தப்படும் கோமியம் போன்றவை பலவிதத்தில் பொருளாதாரமாக இருந்தன. இப்போது அது, மாட்டிறைச்சி பொருளாதாரமாக மாறிவிட்டது.
க டந்த 2024 - --25ல் மட்டும், 45 லட்சம் டன் மாட்டிறைச்சி நம் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. 2025 - --26ம் நிதியாண்டில், 46 லட்சம் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மத்திய அரசு, 'கோ பூஜை' செய்வது முக்கியமல்ல. பொங்கல் கொண்டாடுவது முக்கியமல்ல. முதலில் மாட்டிறைச்சி ஏற்றுமதியை நிறுத்த வேண்டும். அதை நிறுத்தினால் மாடுகள், காளைகள் உயிரோடு இருக்கும்.
கூட்டு பிரார்த்தனை
பசுக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுக்கின்றனரோ, பசு வதையை யார் தடுக்கின்றனரோ அவர்களுக்குத்தான் ஓட்டு போடுவது என்று தேர்தல் நேரத்தில் நாம் முடிவெடுத்தால், நாம் நினைக்கும் பசு வதை தடுப்பு நடக்கும். இவ்வாறு கோபால்ஜி பேசினார்.
விழாவில், 'கோ ஸம்ரக்ஷண சாலா' தலைவர் மூத்த வக்கீல் பி.ஹரிதாஸ் தலைமை தாங்கி பேசினார். செயலர் 'விநாயகர்' வி.முரளி வரவேற்புரையாற்றினார். இதையடுத்து, கூட்டு பிரார்த்தனை, மஹா சங்கல்பத்துடன் கூடிய சிறப்பு கோ பூஜை நடந்தது. ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர்.

