திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறது மத்திய அரசு தர்மபுரியில் நடந்த விழாவில் ஸ்டாலின் பேச்சு
திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறது மத்திய அரசு தர்மபுரியில் நடந்த விழாவில் ஸ்டாலின் பேச்சு
ADDED : மார் 12, 2024 12:52 AM

தர்மபுரி: ''மாநில அரசிடம் பணம் வாங்கி, திட்டங்களுக்கு மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது,'' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில் நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய, மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த, 8,736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தார்; 560.23 கோடி ரூபாய் மதிப்பில், 75 புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
சமமாக மதிக்கவில்லை
பின் அவர் பேசியதாவது:
தர்மபுரி என்றாலே நினைவுக்கு வருவது ஒகேனக்கல். 2008ல் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது, ஜப்பான் சென்று, நிதி வசதி பெற்று, 1,928 கோடி ரூபாய் மதிப்பில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீருக்கு திட்டமிடப்பட்டது.
அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
அதன்பின் ஆட்சி மாறியது; காட்சி மாறியது. ஒகேனக்கல் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர். நான் நேரில் வந்து போராட்டம் நடத்தினேன். தர்மபுரி மாவட்ட மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க காரணமானவன் என்ற மகிழ்ச்சியில் உங்கள் முன் நிற்கிறேன்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களையும், சமமாக மதித்து நாம் செயல்படுகிறோம். ஆனால், மத்திய அரசு அப்படி மாநிலங்களை சமமாக மதிக்கவில்லை. மாநிலங்களையே அழிக்க நினைக்கிறது.
அதன் மூலம் மொழி, இனம், பண்பாட்டை அழிக்க பார்க்கிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமானது நிதி; அந்த நிதி ஆதாரத்தை பறிப்பது மாநில வளர்ச்சிக்கான ஆக்சிஜனை நிறுத்துகின்ற மாதிரி, அதைத்தான் மத்திய அரசு இப்போது செய்து வருகிறது.
தேர்தல் நெருங்கி வருவதால், பிரதமர் மோடி தமிழகத்திற்கு அடிக்கடி சுற்றுப்பயணம் வருகிறார். இதை, தமிழக மக்கள், வெற்றுப் பயணமாகத் தான் நினைக்கின்றனர்.
இந்த பயணங்களால், வளர்ச்சி திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா, 2019ல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி இப்போது நடப்பதாக நாடகம். தேர்தல் முடிந்ததும் பணியை நிறுத்தி விடுவர்.
கடந்த, 10 ஆண்டுகளில் காஸ் சிலிண்டர் விலையை, 500 ரூபாய் உயர்த்தி விட்டு, தற்போது, 100 ரூபாய் குறைக்கப்பட்டது அப்பட்டமான மோசடி.
சென்னை, துாத்துக்குடி, மழை வெள்ளத்தால் பாதித்த போது, மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி, இப்போது தேர்தல் வருவதால் அடிக்கடி வருகிறார். ஓட்டு கேட்டுத்தான் வருகிறார் என மக்களுக்கு தெரியும்.
தமிழகத்துக்கு ஜி.எஸ்.டி., நிதி தரவில்லை; வெள்ள நிவாரணம் தரவில்லை. மெட்ரோ ரயில், 2ம் கட்ட பணிகளுக்கு நிதி ஒப்புதல் வழங்கவில்லை.
விமர்சனம்
பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு மாநில அரசு, 75 சதவீத நிதி வழங்குகிறது. 'ஜல்ஜீவன்' திட்டத்திற்கு, 50 சதவீதம் மாநில அரசின் பணத்தில் வழங்கப்படுகிறது. மாநில அரசிடம் பணம் வாங்கி, இத்திட்டங்களுக்கு மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது.
மத்திய அரசுக்கு வரி வருவாயை, மாநில மக்கள் கொடுக்கின்றனர். பிரதமர் மோடி தமிழகத்திற்கு வெறும் கையால் முழம் போட்டுக் கொண்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் பிரதமருக்கு மக்கள் மீது பாசம் பொழிகிறது.
மக்களும், தி.மு.க.,வும் ஒரே குடும்பமாக செயல்பட்டு வருகிறோம். இதைத் தான் குடும்ப ஆட்சி என்று விமர்சிக்கின்றனர்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

