த.வெ.க., தலைவர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு அறிவிப்பு; ஏற்பது குறித்து பரிசீலனை
த.வெ.க., தலைவர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு அறிவிப்பு; ஏற்பது குறித்து பரிசீலனை
ADDED : பிப் 14, 2025 06:54 PM
சென்னை:மத்திய உள்துறையால் வழங்கப்பட்ட, 'ஒய்' பிரிவு பாதுகாப்பை ஏற்பது குறித்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் என்பதால், விஜய் செல்லும் இடங்களில் தொண்டர்கள் மட்டுமின்றி, பொது மக்களும் அதிகளவில் கூடும் வாய்ப்புள்ளது. சமீபத்தில், பரந்துார் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை, விஜய் நேரில் சந்தித்தார். அப்போது, பெரிய அளவில் கூட்டம் திரண்டது. ஆளும் கட்சி எதிர்ப்பு அரசியலால், விஜய்க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அவருக்கு துப்பாக்கி ஏந்திய, 24 பேர் அடங்கிய, 'ஒய்' பிரிவு சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு வழங்கப்படுவதாக, மத்திய உள்துறை அறிவித்துள்ளது. இதனால், பொது இடங்களுக்கு சி.ஆர்.பி.எப்., வீரர்கள் புடை சூழ, விஜய் இனி பாதுகாப்பாக சென்று வர முடியும். விஜய் தலைமையில் பனையூரில் மட்டுமே அரங்கேறிய கட்சி நிகழ்வுகள், இனி மாநிலம் முழுதும் நடக்கும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்டுள்ள சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பை ஏற்பது குறித்து, விஜய் ஆலோசித்து வருவதாக, அவரது கட்சியினர் கூறுகின்றனர்.
'ஒய்' பிரிவில் 24 பேர்
'ஒய்' பிரிவில், சி.ஆர்.பி.எப்., அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என, 24 பேர் இருப்பர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி இடங்களில், ஒரு ஷிப்ட்டுக்கு எட்டு பேர் வீதம் துப்பாக்கி ஏந்தியபடி, சுழற்சி அடிப்படையில், 24 மணி நேரமும் நடிகர் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பர்.
அடுத்தது சீமான்?
இதற்கிடையில் சமீப காலமாக, ஈ.வெ.ரா.,வை அதிகம் விமர்சித்து வரும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க, மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.