மத்திய அரசின் புதிய சட்டங்களால் தனி மனிதனை குற்றவாளியாக்கலாம்: ரகுபதி
மத்திய அரசின் புதிய சட்டங்களால் தனி மனிதனை குற்றவாளியாக்கலாம்: ரகுபதி
ADDED : நவ 18, 2024 06:21 AM

சென்னை: ''மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று புதிய சட்டங்கள் வாயிலாக, ஆவணங்களை எளிதாக உருவாக்கி, தனி மனிதனை குற்றவாளியாக்க முடியும்,'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், மத்திய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தென்னிந்திய வழக்கறிஞர்கள் மாநாடு, சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது.
மாநாட்டில், தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியிடம், 'வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும்' என, கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பின், அமைச்சர் ரகுபதி பேசியதாவது:
புதிய குற்றவியல் சட்ட பெயர்கள், 'இண்டியா' கூட்டணியை நினைவுப்படுத்துகின்றன. அந்த கூட்டணி கட்சிப்பெயரின் முதல் வார்த்தையான, 'பாரதிய' என்ற வார்த்தையை, மக்கள் இடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில், சட்டத்தின் பெயரை மாற்றியுள்ளனர். ஹிந்தியை மறைமுகமாக திணிக்கும் நோக்கமும் தெரிகிறது.
இச்சட்டங்களில் சேர்க்கப்பட்ட பிரிவுகள் வாயிலாக, சாமானியர்கள் பாதிக்கப்படுவதால் நாடே எதிர்க்கிறது. பிரிவுகள் ஒன்றுக்கு ஒன்று முரணாகவும், குழப்பமாகவும் உள்ளன.
இச்சட்டங்களின் வாயிலாக, ஆவணங்களை எளிதாக உருவாக்கி, தனி மனிதனை குற்றவாளியாக்க முடியும். இவற்றில் உள்ள, சாதக, பாதகங்களை கண்டறிய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அறிக்கையை பெற வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.