ஜி.எஸ்.டி., இழப்பீட்டு முறையை மத்திய அரசு தொடர வேண்டும்: கவர்னர் உரையில் அரசு வலியுறுத்தல்
ஜி.எஸ்.டி., இழப்பீட்டு முறையை மத்திய அரசு தொடர வேண்டும்: கவர்னர் உரையில் அரசு வலியுறுத்தல்
ADDED : பிப் 13, 2024 04:13 AM
சென்னை : 'ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு முறையை, மத்திய அரசு தொடர வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு, மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என, கவர்னர் உரையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
கவர்னர் உரையின் தமிழாக்கத்தை, சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
அதில் இடம் பெற்றுள்ளதாவது:
'மிக்ஜாம்' புயல் மற்றும் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவால், மாநிலத்தின் பொது சொத்துக்கள் மற்றும் கட்டமைப்புகளுக்கு, பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
நம்புகிறோம்
தற்காலிக மற்றும் நிரந்தர மறு சீரமைப்பு பணிகளுக்காக, தென் மாவட்டங்களுக்கு, 18,214 கோடி ரூபாய்; சென்னை மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளுக்கு, 19,692 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது.
தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, மத்திய அரசு உடனடியாக நிதி வழங்கும் என்று நம்புகிறோம்.
மத்திய அரசு, ஜி.எஸ்.டி., இழப்பீட்டு முறையை நிறுத்தியதன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுக்கு, 20,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த ஜி.எஸ்.டி., இழப்பீட்டு முறையை, மத்திய அரசு தொடர்ந்திட வேண்டும்.
நிறைவேற்றவில்லை
இந்நிதி நெருக்கடிக்கு இடையே, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு, தன் பங்களிப்பை வழங்குவதாக உறுதி அளித்திருந்த மத்திய அரசு, தன் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
இத்திட்டத்தில், மத்திய மாநில அரசு பங்களிப்பு 50:50 சதவீதமாக இருக்கும் என்ற அடிப்படையில், 63,246 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிற மாநிலங்களின் திட்டங்களுக்கு, மத்திய அரசு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், தமிழக திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
இதனால், இரண்டாம் கட்டத்திற்கான முழு செலவினமும், மாநில அரசால் செலவழிக்கப்படுவதால், மாநில நிதி நிலையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு இத்திட்டத்திற்கான ஒப்புதலை, விரைவில் அளிக்க வேண்டும்.
அரசு உறுதி
தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை பேணி பாதுகாப்பதில், அரசு உறுதியாக உள்ளது.
அந்த வகையில், மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை, தமிழகத்தில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த அனுமதிப்பதில்லை என்பதில், அரசு உறுதியாக உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, ஜாதிவாரியான மக்கள் கணக்கெடுப்பை ஒருங்கிணைந்து நடத்த வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கை, மத்திய அரசால் ஏற்கப்படும் என அரசு நம்புகிறது.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும், மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.