பதிவு செய்த நாளிலேயே பத்திரம்; இலக்கை எட்டிய 8 பேருக்கு பதக்கம்
பதிவு செய்த நாளிலேயே பத்திரம்; இலக்கை எட்டிய 8 பேருக்கு பதக்கம்
ADDED : ஜன 28, 2025 05:57 AM

சென்னை : பத்திரங்களை பதிவு செய்த நாளிலேயே திருப்பிக் கொடுப்பதில், 100 சதவீதம் என்ற இலக்கை எட்டிய எட்டு சார் - பதிவாளர்களுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
தமிழகத்தில், 'ஸ்டார் 2.0' வாயிலாக, பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றில், கள ஆய்வு போன்ற தேவைகள் இல்லாத இனங்களில், பத்திரங்களை பதிவு செய்த நாளிலேயே திருப்பித் தர வேண்டும்.
ஆனால், பெரும்பாலான அலுவலகங்களில், சார் - பதிவாளர்கள் பத்திரங்களை நிலுவையில் வைப்பதாக புகார் கூறப்படுகிறது. அதனால், பதிவு செய்த நாளிலேயே பத்திரங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, சார் - பதிவாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், பத்திரங்களை பதிவு செய்த நாளிலேயே திருப்பிக் கொடுப்பதில், 100 சதவீத இலக்கை எட்ட வேண்டும். இவ்வாறு, 100 சதவீத இலக்கை எட்டும் சார் - பதிவாளர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு வெள்ளி பதக்கம் வழங்கப்படும் என, 2022 - 23ல் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, பத்திரங்களை பதிவு செய்த நாளிலேயே திருப்பிக் கொடுப்பதில், 100 சதவீத இலக்கை எட்டிய எட்டு சார் - பதிவாளர்களுக்கு, சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வெள்ளி பதக்கம், பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இதன்பின் நடந்த பணி சீராய்வு கூட்டத்தில், அமைச்சர் மூர்த்தி பேசுகையில், ''பத்திரங்களை பதிவு செய்தவுடன் திருப்பிக் கொடுப்பது இயல்பான பழக்கமாக மாற வேண்டும். அத்துடன் பதிவு முடிந்த நிலையில், பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளையும் சார் - பதிவாளர்கள் உடனுக்குடன் முடிக்க வேண்டும்,'' என்றார்.