குப்பை மறுசுழற்சி மையம் கட்ட எதிர்ப்பு சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆய்வு
குப்பை மறுசுழற்சி மையம் கட்ட எதிர்ப்பு சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : நவ 30, 2024 05:00 AM

கோட்டக்குப்பம் : பெரிய முதலியார்சாவடியில் குப்பை மறுசுழற்சி மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த இடத்தை ஆய்வு செய்த எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் பேசி, மாற்று இடத்தில் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
கோட்டக்குப்பம் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கோட்டைமேட்டில் கொட்டப்பட்டு வருகிறது. அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், பெரிய முதலியார்சாவடியில் நகராட்சி சார்பில் குப்பை மறுசுழற்சி மையக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் மற்றும் நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி நடந்த பில்லர் அமைக்கும் பணியை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர். அதன்பிறகு கட்டுமான பணி நடைபெற்று வருவதை தொடர்ந்து நேற்று முன்தினம், அப்பகுதி மக்கள், சக்கரபாணி எம்.எல்.ஏ.,வை சந்தித்து மனு அளித்தனர்.
அதன்பேரில் மறுசுழற்சி மையம் கட்டும் இடத்தை நேற்று ஆய்வு செய்த சக்கரபாணி எம்.எல்.ஏ., கட்டடத்தை மாற்று இடத்தில் கட்ட கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பொது மக்களின் எதிர்ப்பால், தற்போது, கட்டுமானப் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

