சட்டசபை தேர்தலுக்கு இணையாக வாணிப கழக சங்க அங்கீகார தேர்தல்
சட்டசபை தேர்தலுக்கு இணையாக வாணிப கழக சங்க அங்கீகார தேர்தல்
ADDED : டிச 11, 2025 03:55 AM
சென்னை: சட்டசபை தேர்தலுக்கு இணையாக, தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தில், தொழிற்சங்கத்தை அங்கீகாரம் செய்வதற்கான தேர்தல், நேற்று மாநிலம் முழுதும் நடந்தது. இதில், எட்டு தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன.
தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களை, இந்திய உணவு கழகம் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பணியை, நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொள்கிறது.
வாணிப கழகத்தில், நிரந்தர மற்றும் பருவகால பணியாளர்களாக, 14,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அவர்கள், பல்வேறு தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.
பணியாளர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி, அதிக ஓட்டு வாங்கும் சங்கம் அங்கீகரிக்கப்படும். அதனிடம் தான், பணியாளர்கள் நலன் தொடர்பாக, நிர்வாகம் பேச்சு நடத்தும்.
கடந்த, 2009க்கு பின், தொழிற்சங்கங்களின் பிரதிநிதித்துவ நிலையை அறிய, மாநிலம் முழுதும் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகங்களில், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில், நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது.
தி.மு.க., - அ.தி.மு.க., உட்பட, எட்டு தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன. சென்னையில் கோபாலபுரம், கோயம்பேட்டில் ஓட்டுப்பதிவு நடந்தது.
வாணிப கழக கிடங்கு, அமுதம் ரேஷன் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பணிபுரிவோர் ஓட்டளித்தனர்.
தேர்தல் பணியில் ஈடுபட்ட சங்கங்களின் நிர்வாகிகள் ஆதரவாளர்களுக்கு, சிக்கன் பிரியாணி, சைவ உணவு வழங்கினர். ஓட்டுச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கோபாலபுரம் ஓட்டுச்சாவடியில், நேற்று மதியம் தி.மு.க., - அ.தி.மு.க., சங்க நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின், போலீசார் சமாதனம் செய்தனர்.
இது குறித்து, வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ஒருவர் கூறுகையில், 'தமிழகம் முழுதும் மொத்தம், 14,781 பணியாளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றவர்கள். எட்டு தொழிற்சங்கங்கள் தேர்தலில் போட்டியிட்டன.
'சென்னையில் மூன்று உட்பட மாநிலம் முழுதும், 51 ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் நடந்தது. அதிக ஓட்டு பெறும் சங்கம் அங்கீகரிக்கப்படும்' என்றார்.

