ADDED : டிச 21, 2024 12:21 AM
சென்னை:ரேஷனில் வழங்க தரமான பருப்பு, பாமாயில் வாங்கப்பட உள்ளதாக, தமிழக நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனர் அண்ணாதுரை தெரிவித்து உள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
இதற்கான டெண்டரில் பங்கேற்ற, 18 நிறுவனங்களிடம் இருந்து, 30 பருப்பு மாதிரிகளும், ஒன்பது நிறுவனங்களிடம் ஒன்பது பாமாயில் மாதிரிகளும் பெறப்பட்டன.
ஒவ்வொரு நிறுவனமும் சமர்ப்பித்த இரு மாதிரிகளில் ஒன்றை பகுப்பாய்விற்காக, ஆய்வகம் அனுப்பி வைப்பதும், இரண்டாவது மாதிரியை மூன்று மாதங்களுக்கு பாதுகாப்பாக வைப்பதும் நடைமுறை. முதல் பகுப்பாய்வில் ஒரு மாதிரி தேர்வு பெறாத சமயங்களில், இரண்டாவது மாதிரி பகுப்பாய்வு செய்யப்படும். அதிலும், தேர்ச்சி பெறாத நிறுவனத்தின் விலைப்புள்ளி திறக்கப்படாது.
அதன்படி, இந்த டெண்டரில் பெறப்பட்ட பருப்பு மாதிரிகள், பாமாயில் பகுப்பாய்விற்காக ஆய்கவகத்திற்கு அனுப்பப்பட்டன. மாதிரிகளின் ஆய்வு அறிக்கையில், 30 பருப்பு மாதிரிகளில், 24 தரத்துடன் இருப்பதாகவும், ஆறு மாதிரிகள் உரிய தரத்தில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதனால், அந்நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டாவது மாதிரிகள் மீண்டும் பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டன.
முதலாவது மாதிரி உரிய தர நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை எனில், அதன் இரண்டாவது மாதிரியை பரிசீலிப்பது வழக்கம். அதன்படி, இரண்டாவதாக தரப்பட்ட ஆறு மாதிரிகள் தேர்ச்சி பெற்றன.
அதன் அடிப்படையில் விலைப்புள்ளி திறக்கப்பட்டது. பருப்பில் குறைந்த விலைப்புள்ளி அளித்த நான்கு நிறுவனங்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன. பாமாயிலுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

