காவிரியில் நீர்வரத்து சரிவு எதிரொலி கல்லணை நீர் திறப்பில் மாற்றம்
காவிரியில் நீர்வரத்து சரிவு எதிரொலி கல்லணை நீர் திறப்பில் மாற்றம்
ADDED : செப் 26, 2024 02:16 AM
சென்னை:கர்நாடகாவில் இருந்து காவிரி நீர்வரத்து சரிந்துள்ளதால், கல்லணை நீர் திறப்பில் மாற்றம் செய்ய, நீர்வளத் துறை முடிவெடுத்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமான மேட்டூர் அணையில் தற்போது, 64.5 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 1,537 கன அடியாக குறைந்துள்ளது.
சம்பா பருவ நெல் சாகுபடி பாசனத்திற்காக, வினாடிக்கு 20,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கால்வாய் வாயிலாக வினாடிக்கு 700 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கல்லணையில் இருந்து வினாடிக்கு 15,000 கன அடி நீர், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் திறக்கப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்திற்கு அடுத்தாண்டு ஜன., 28 வரை தொடர்ச்சியாக நீர் திறக்கப்பட வேண்டும்.
வடகிழக்கு பருவ மழை ஏமாற்றினால், பாசனம் மட்டுமின்றி, சென்னை, கரூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் கோடைகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்படும். கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் வரத்து குறைந்துள்ளது.
இதனால், கல்லணையில் இருந்து நாளை முதல் முறைவைத்து நீர் திறக்க, நீர்வளத் துறை முடிவு எடுத்துள்ளது. இதற்கான அறிவுறுத்தலை, திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் தயாளகுமார் வழங்கி உள்ளார்.
அதன்படி, நாளை மாலை 6:00 மணி முதல் ஆறு நாட்கள் வெண்ணாற்றில் நீர் திறக்கப்பட உள்ளது. அடுத்த ஆறு நாட்கள், காவிரியில் நீர் திறக்கப்பட உள்ளது.
கல்லணை கால்வாயின் மேற்கு, கிழக்கு பகுதிக்கும் முறைவைத்து நீர் திறக்கப்பட உள்ளது. கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

