ADDED : ஏப் 27, 2026 04:51 PM
நாகர்கோவில்: முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் வரிசை மாற்றப்பட்டிருந்ததால் பயணிகள் ஏற முடியவில்லை. அதற்குள் ரயில் புறப்பட்டதால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் விரைவு ரயில் இரவு 8:30 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வர வேண்டும். ஏப்ரல் 26 அன்று இந்த ரயில் இரவு 8.50 மணிக்கு வந்து சேர்ந்தது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் வரிசை மாற்றப்பட்டிருந்தது. இது தொடர்பாக ரயில் நிலையத்தில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
முன்பதிவு செய்த பயணிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டி வரும் என்று எதிர்பார்த்து நின்ற இடத்தில் வேறு பெட்டிகள் நின்றன. தங்கள் பெட்டிகளை தேடி அங்கும் இங்கும் ஓடினர். சில பெட்டிகளில் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் ரயில் புறப்பட்டது. இதை தொடர்ந்து ரயிலில் ஏறி இருந்த சிலர் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். சிலர் ரயில் முன் நின்று போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த ரயில்வே அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இனிவரும் காலங்களில் ரயில் பெட்டிகளின் வரிசை மாற்றப்பட்டால் அது பற்றிய அறிவிப்பு முன்கூட்டியே ஒலிபெருக்கியில் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பயணிகள் சமாதானம் அடைந்தனர். பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.
