ஓய்வூதிய திட்டத்தில் வருகிறது மாற்றம்: முதல்வர் இன்று அறிவிப்பு
ஓய்வூதிய திட்டத்தில் வருகிறது மாற்றம்: முதல்வர் இன்று அறிவிப்பு
UPDATED : ஜன 03, 2026 06:57 AM
ADDED : ஜன 03, 2026 06:52 AM

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. வரும் 6ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, 'ஜாக்டோ ஜியோ' கூட்டமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் அறிவித்தன.
அதை தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு நேற்று தலைமை செயலகத்தில் உள்ள தன் அலுவலகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினார். இதில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும் பங்கேற்றார். அப்போது, ஓய்வூதிய திட்டத்தில் சிறு மாற்றம் செய்து, அதற்கான அறிவிப்பை இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என, அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, சங்க நிர்வாகிகள் அளித்த பேட்டி:
அமிர்தகுமார், தலைமை ஒருங்கிணைப்பாளர், போட்டா ஜியோ: பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 6ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருந்தோம். அமைச்சர்கள் எங்களை அழைத்து, கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
கடந்த 23 ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை, கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. முக்கிய அறிவிப்பை இன்று முதல்வர் வெளியிடுவார் என அமைச்சர்கள் தெரிவித்தனர்; மற்ற கோரிக்கைகளுக்கும் தீர்வு கண்டு விடலாம் என உறுதி அளித்தனர்.
வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளர், ஜாக்டோ ஜியோ: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக,ஏற்கனவே நான்கு முறை அமைச்சர்கள் பேச்சு நடத்தினர். வரும் 6ம் தேதி போராட்டம் அறிவித்துள்ள நிலையில், மீண்டும் பேச்சு நடத்தினர். ஓய்வூதியம் தொடர்பாக அனைவரும் மகிழும் வகையில், முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
முதல்வரின் அறிவிப்பால், 2003ம் ஆண்டுக்கு பின் பணி ஓய்வுபெற்ற 48,000 அரசு ஊழியர்களும் மகிழ்ச்சி அடைவர் என எதிர்பார்க்கிறோம். அறிவிப்பு வந்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் கூடி பேசி அறிவிப்போம். இவ்வாறு கூறினர்.

