ADDED : ஆக 12, 2025 03:16 AM
சென்னை: விவசாயிகளின் வங்கி கணக்கில், நேரடியாக பயிர் இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு 48.9 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுதும், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. இத்திட்டத்தின்படி காப்பீடு செய்வதற்கு, மத்திய அரசின் காப்பீடு நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் நியமிக்கப்பட்டு உள்ளன.
பயிர் பாதிப்பு ஏற்படும்போது, அதை வேளாண்மை, வருவாய், புள்ளியியல் துறை உள்ளிட்டவற்றுடன், காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகளும் ஆய்வு செய்வர். பயிர் பாதிப்பை கணக்கெடுத்த பின், பாதித்த விவசாயிகளுக்கு, நேரடியாக காப்பீட்டு நிறுவனங்கள் வாயிலாக இழப்பீடு வழங்கப்படும்.
இந்த நடைமுறையை, மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. இதற்கென, பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தை போல், தேசிய பயிர் காப்பீடு இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, பயிர் பாதித்த விவசாயிகள் விபரம் பதிவு செய்யப்பட்டு, காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து, மத்திய அரசுக்கு இழப்பீட்டு தொகை பெறப்படுகிறது.
இதை மத்திய அரசு, விவசாயிகளின் வங்கி கணக்குகளில், நேரடியாக செலுத்துகிறது. இந்த நடைமுறைப்படி, முதல் முறையாக, 3,863 கோடி ரூபாயை, விவசாயிகளின் வங்கி கணக்குகளில், மத்திய அரசு நேரடியாக நேற்று விடுவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தை சேர்ந்த 64,438 விவசாயிகளுக்கு, 48.9 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது.