நயினார் நாகேந்திரன் மீதான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு நிறுத்தி வைப்பு
நயினார் நாகேந்திரன் மீதான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு நிறுத்தி வைப்பு
ADDED : ஆக 12, 2026 05:32 AM

சென்னை: கடந்த லோக்சபா தேர்தலின்போது, ரயிலில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 13 பேர் மீது, இன்று நடக்க இருந்த குற்றச்சாட்டு பதிவை நிறுத்தி வைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போது, சென்னை தாம்பரத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், 3 கோடியே 98 லட்சத்து 91,500 ரூபாயை பறிமுதல் செய்தனர். அந்த பணம், வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக எடுத்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த வழக்கில், நெல்லை தொகுதி பா.ஜ., வேட்பாளரும், தற்போதைய தமிழக பா.ஜ., தலைவருமான நயினார் நாகேந்திரன், பா.ஜ., நிர்வாகி சேகர் உட்பட 13 பேர் மீது, சி.பி.சி.ஐ.டி., வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
வழக்கு விசாரணை, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட இருந்தது. இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பா.ஜ., நிர்வாகி சேகர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது நீதிபதி லட்சுமி நாராயணன் முன் விசாரணை நடந்தது. அப்போது, மனுதாரர் மற்றும் சி.பி.சி.ஐ.டி., தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விசாரணையை வரும் 19ம் தேதிக்கு தள்ளி வைத்து, பதில் மனு தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
அதுவரை, விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு நடைமுறைகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவிட்டர்.
