சட்ட கல்லுாரி மாணவரை தாக்கிய போலீசார் மீது குற்றப்பத்திரிகை
சட்ட கல்லுாரி மாணவரை தாக்கிய போலீசார் மீது குற்றப்பத்திரிகை
ADDED : ஏப் 22, 2025 06:54 AM
சென்னை: முகக்கவசம் அணியவில்லை என, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, சட்டக் கல்லுாரி மாணவரை தாக்கிய போலீசார் ஆறு பேர் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹிம்; சட்டக் கல்லுாரி மாணவர்.
ரூ.500 அபராதம்
கடந்த, 2022, ஜன., 13ம் தேதி இரவு, 11:30 மணியளவில், கொடுங்கையூரில் சைக்கிளில் சென்றுள்ளார்.
அவரை போலீசார் வழிமறித்து, கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் முகக்கவசம் அணியவில்லை என, 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
மேலும், சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனால், மாணவருக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
அவரை வலுக்கட்டாயமாக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, மாணவரை தாக்கியுள்ளனர். அதுபற்றிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டக் கல்லுாரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாக்கப்பட்ட மாணவர் தரப்பில், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த, எஸ்.ஐ., பழனி, முதல் நிலை காவலர் உத்திரகுமார், தலைமை காவலர் பூமிநாதன் உட்பட, போலீசார் ஒன்பது பேர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டது; பின், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
விசாரணை
இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, இன்ஸ்பெக்டர் செல்வின் சாந்தகுமார் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆறு போலீசார் மீது மட்டும், சென்னை எழும்பூரில் உள்ள நீதிமன்றத்தில், 1,347 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர்.