ADDED : ஜன 09, 2024 02:56 AM
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஜன.,21ல் தேரோட்டம் நடக்க உள்ளது.
சிவகங்கை சமஸ்தான நிர்வாகத்தில் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. தேரோட்டத்தில் வடம் பிடிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டு பல ஆண்டுகளுக்கு முன் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. 17 ஆண்டுகளாக தேரோட்டம் நடத்தப்படவில்லை. புதிய தேர் செய்த நிலையிலும் ஓரிரு ஆண்டுகளாக முடிவு எடுக்கப்படாமல் இருந்தது. பக்தர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இறுதியாக தேதியை முடிவு செய்து தேரோட்டம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த மாதம் கலெக்டர் ஆஷாஅஜித் தலைமையில் அதிகாரிகள், சிவகங்கை தேவஸ்தான நிர்வாகம், இரு தரப்பினர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. ஜன. 21 வெள்ளோட்டம் நடத்த இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை வெள்ளோட்டம் சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆர்.டி.ஓ., பால்துரை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூடுதல் எஸ்.பி. நமசிவாயம், டி.எஸ்.பி. பார்த்திபன், சிவகங்கை சமஸ்தான சிரஸ்தார் சுப்பிரமணியன், கோயில் கண்காணிப்பாளர் பாண்டிக்குமார் முன்னிலையில் நான்கு நாட்டைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். ஜன. 21 காலை 6:00 மணிக்கு மேல் 8:00 மணிக்குள் கும்பத்தை வைத்து தேரோட்டத்தை நடத்துவது என்றும், சமஸ்தான ஊழியர்கள் தேரை இழுப்பார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டது. அனைவரும் ஏற்றனர். 17 ஆண்டுகளுக்கு பிறகு கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் நடக்க உள்ளது அப்பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.