ADDED : டிச 18, 2024 12:43 AM
சென்னை:தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டியில் சவுக்கு சங்கர், 48, தங்கியிருந்தபோது, அவரது கார் மற்றும் அவரது உதவியாளர் உள்ளிட்டோரிடம் இருந்து, 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால், சவுக்கு சங்கர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல், அவரது வழக்கறிஞர் வாயிலாக மனு அளித்தார்.
மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி செங்மலச் செல்வன், சவுக்கு சங்கருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை வரும், 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை தேனாம்பேட்டை போலீசார் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தில், சவுக்கு சங்கரை கைது செய்தனர். தேனி மாவட்ட போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என, சென்னை போலீசார் தெரிவித்தனர்.