ADDED : டிச 03, 2024 12:32 AM

சென்னை, 'பெஞ்சல்' புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் விழுப்புரம் சுற்றுவட்டார பகுதியில், இந்திய ராணுவத்தின் 'மெட்ராஸ் ரெஜிமென்ட்' பிரிவினர், 1,000த்துக்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
நேற்று முன்தினம், புதுச்சேரி அருகே புயல் கரையை கடந்தபோது, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்தது.
இம்மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. அதேபோல, புதுச்சேரி மாநிலமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், வெளியேற முடியாமல் வீடுகளில் மழை நீரில் தத்தளித்த மக்களை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் ராணுவ வீரர்களும் களம் இறங்கி உள்ளனர். புதுச்சேரி பகுதிகளில், ராணுவத்தின் 'மெட்ராஸ் ரெஜிமென்ட்' பிரிவைச் சேர்ந்த, மேஜர் அஜய் சங்வான் தலைமையில், ஆறு இளநிலை அதிகாரிகள் உட்பட 70 வீரர்கள் மீட்புப் பணியில் இறங்கினர். இவர்கள், கடந்த 1ம் தேதி நள்ளிரவு 1:00 மணிக்கு சென்னையில் இருந்து புதுச்சேரி சென்றனர்.
அங்கு, கிருஷ்ணா நகர் பகுதியில் 5 அடி உயரத்திற்கு வெள்ளம் சூழ்ந்து இருந்தது. அதை பொருட்படுத்தாமல், 500 வீடுகளில் தவித்துக் கொண்டிருந்த 100க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக மீட்டனர். அதேபோல, குபேர நகர், ஜீவா நகர் என, அதிக வெள்ளம் பாதித்த பகுதிகளில், இரண்டு குழுவாக வீரர்கள் பிரிந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
பேரிடர் நேரங்களில் மீட்புப் பணிக்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும், 'பவுட்' என்ற ராணுவப் படகு வாயிலாக, 700க்கும் மேற்பட்டவர்களை மீட்டனர்.
நடக்க முடியாத முதியோரை, வீரர்கள் தோளில் சுமந்து சென்றனர்; காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
சில பகுதிகளில், வீடுகளின் இரண்டாம் தளத்தில் குடிநீர், உணவு இல்லாமல் தவித்தவர்களுக்கு, உணவு மற்றும் குடிநீர் வழங்கினர். தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.