கான்ட்ராக்டரிடம் லஞ்சம் கேட்ட சென்னை தி.மு.க., கவுன்சிலர் நீக்கம்
கான்ட்ராக்டரிடம் லஞ்சம் கேட்ட சென்னை தி.மு.க., கவுன்சிலர் நீக்கம்
ADDED : அக் 06, 2024 07:24 PM
சென்னை:அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன ஒப்பந்ததாரிடம் பணம் கேட்டு மிரட்டிய, சென்னை தி.மு.க., கவுன்சிலர் ஸ்டாலின், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
சென்னை, மதுரவாயல் வி.ஜி.பி., அமுதா நகரில், கூவம் கரையோரத்தில், சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கழிவு நீர் உந்து நிலையம் அமைக்கும் பணி, 56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கான ஒப்பந்தத்தை, தனியார் நிறுவன ஒப்பந்ததாரர் நாகராஜ் எடுத்துள்ளார்.
சமீபத்தில், மாநகராட்சியின் 144வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஸ்டாலின், தன் ஆதரவாளர்களுடன் அமுதா நகருக்கு சென்று, இப்பணிகள் நடக்க வேண்டுமானால், தனக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என, மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, சென்னை குடிநீர் வாரிய செயற் பொறியாளர் மற்றும் தனியார் நிறுவன ஒப்பந்ததாரர் சார்பில், கோயம்பேடு போலீஸ் நிலையத்தில், கவுன்சிலர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கவுன்சிலர் ஸ்டாலினை, கட்சியலிருந்து நீக்கி, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் வடக்கு பகுதி, 144 வட்ட செயலரும், கவுன்சிலருமான ஸ்டாலின், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.