நடிகை கஸ்துாரிக்கு நிபந்தனை ஜாமின் சென்னை எழும்பூர் கோர்ட் உத்தரவு
நடிகை கஸ்துாரிக்கு நிபந்தனை ஜாமின் சென்னை எழும்பூர் கோர்ட் உத்தரவு
ADDED : நவ 20, 2024 07:55 PM
சென்னை:தெலுங்கர் குறித்து அவதுாறாக பேசியதாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்துாரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 3ம் தேதி, சென்னை எழும்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்துாரி, தெலுங்கர் குறித்து சர்ச்சையான கருத்துகளை பேசினார். இதனால், அவர் மீது கலவரத்தை துாண்ட முயற்சி செய்தல் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஹைதராபாத்தில் இருந்த கஸ்துாரியை கைது செய்த போலீசார், சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, கஸ்துாரிக்கு ஜாமின் வழங்க கேட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு நீதிபதி தயாளன் முன் விசாரணைக்கு வந்தது. கஸ்துாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் 'கஸ்துாரிக்கு, 12 வயதில், ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மகன் உள்ளார். அவரை கவனித்துக் கொள்ள வேறு நபர்கள் இல்லாததால், உடனே ஜாமின் வழங்க வேண்டும்' என, வாதிட்டனர்.
இதற்கு போலீஸ் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, கஸ்துாரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதி மனைவி வேண்டுகோள்:
முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மனைவியும், மாற்றுத்திறனாளிகளுக்கான, 'சக் ஷம்' என்ற அமைப்பின் அகில இந்திய துணை தலைவருமான காமாட்சி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
நடிகை கஸ்துாரிக்கு 'ஆட்டிஸம்' பாதிப்போடு ஒரு மகன் உள்ளார் என்றும், அவர் ஒரு தனி மனுஷியாய் அக்குழந்தையை போராடி வளர்த்து வருகிறார் என்பதையும் அறிந்து கொண்டேன்.
இப்பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கும், அவர் தம் பெற்றோருக்கும் அன்றாட வாழ்க்கை என்பதே, ஒரு நித்திய சவால். நானும் கஸ்துாரியை போல ஒரு சிறப்பு அம்மா தான். எனக்கும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறான்.
அதனால், கஸ்தூரி விஷயத்தில் வேண்டுகோள் விடுக்க தோன்றுகிறது. ஜாமின் விஷயத்தில், நீதிமன்றங்கள் குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு அணுக வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
ஒரு மாற்றுத்திறனாளியின் தாயாக, கஸ்துாரிக்கு என் உடன் நிற்றலையும் தார்மீக கடமையாக நினைக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.