சென்னையில் நிலவும் கடும் பனிமூட்டம்; ரயில்கள் தாமதம்
சென்னையில் நிலவும் கடும் பனிமூட்டம்; ரயில்கள் தாமதம்
ADDED : பிப் 04, 2025 07:41 AM

சென்னை; கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் வருகையில் தாமதம் ஏற்பட்டது.
தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில நாட்களாக வானிலையில் மாற்றம் காணப்படுகிறது. சீதோஷ்ண நிலை மாறி, அதிகாலை நேரங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.
இந் நிலையில், இன்றும் (பிப்.4) கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் புறநகர் மின்சார ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டது. செங்கல்பட்டில் வழக்கத்தை விட கடுமையான பனிமூட்டம் காரணமாக, சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரயில்கள் தாமதமாக வந்தன.
மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கொட்டி வரும் கடும் பனிபொழிவால் சாலைகள் தெரியவில்லை. இதனால் அதிகாலை நேரங்களில் பணிக்குச் செல்வோர் சிரமம் அடைந்தனர். வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி அவர்கள் சென்றனர்.
அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது.